சிறப்பு செய்திகள்

கழக எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பால் தபால்துறை தேர்வு ரத்து…

புதுடெல்லி:-

கழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தபால்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அறிவித்தார்.

தபால்துறை தேர்வு வினாத்தாளில் தமிழ் மொழி இடம் பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் கழக எம்.பி.க்கள்  போர்க்கொடி உயர்த்தினார்கள். இப்பிரச்சினைக்கு அமைச்சர் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும், இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கழக எம்.பி.க்கள் கோஷமிட்டார்கள். அவர்களுடன் தி.மு.க. எம்.பி.க்களும் சேர்ந்து கொண்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் அமைதியாக அமரும்படியும் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த கழக எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் அவை பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் உடனடியாக கழக உறுப்பினர்களும், தி.மு.க. உறுப்பினர்களும் அவைத்தலைவர் அருகே சென்று இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இப்பிரச்சினை குறித்து நாளை அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த கழக உறுப்பினர்கள் தொடர்ந்து அவைத்தலைவரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். அதனால் அவை மீண்டும் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்பொழுதும் கழக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் மூன்றாவது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

இப்பிரச்சினை தொடர்பாக மாநிலங்களவை 4-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டு, கடந்த 14-ந்தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் கழக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.