சிறப்பு செய்திகள்

நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப் படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இதனால் 1,137 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், ஆண்டு ஒன்றுக்கு 14 கோடி ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.

விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசுகளில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய் 60 காசுகளில் இருந்து, 24 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசுகளில் இருந்து, 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேட்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளிலிருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

அதே போன்று, விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து, 12 ரூபாய் 16 காசுகளாக அம்மாவின் அரசால் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து 500 பெடல் தறி கூலித் தொழிலாளர்கள் சுமார் 11 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவிற்கு பயன் பெறுவார்கள்.

தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நபார்டு வங்கியின் மறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனத்தை காசுக்கடனாக பெற்று வருகின்றன. அத்தகைய கடனுக்கு, தற்போது தமிழ்நாடு அரசு 4 % மானியமாக வழங்கி வருகிறது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2019-ல் அறிவிக்கப்பட்டவாறு, வட்டிச் சுமையினைக் குறைக்கும் விதமாக, தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏற்படும் செலவினம், 14 கோடியே 40 லட்சம் ரூபாயிலிருந்து 21 கோடியே 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு முதமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.