தற்போதைய செய்திகள்

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நல்லநிலையில் இயக்கம் – அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்…

சென்னை:-

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திரங்கள் பழுதாகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தி.மு.க. கொறடா சக்கரபாணி மற்றும் உறுப்பினர்கள் ஐ.டி.செந்தில்குமார், ஜெயராம கிருஷ்ணன் ஆகியோர் அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1960-ம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 800 மெட்ரிக் டன் அரவை திறனுடன் நிறுவப்பட்டது. தற்போது அந்த ஆலை நாள் ஒன்றுக்கு 1250 மெட்ரிக் டன் அரவை திறனுடன் பயன்பாட்டில் உள்ளது. 2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய அரவை பருவங்களில் ஆலைக்கு தேவையான போதிய கரும்பு இப்பகுதியில் பயிரிடப்படாத காரணத்தினால் கரும்பு அரவை நடைபெறவில்லை. 2018-19 அரவை பருவம் 31.3.2019 முதல் நடைபெற்று வருகிறது. 30.6.2019 வரை 81,148 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.

இந்த அரவை பருவத்தில் கொதிகலனில் ஏற்பட்ட நீராவி குழாய் பழுதின் காரணமாக 12.65 சதவீதம் அரவை நிறுத்தப்பட்டது.
எனினும் நீராவி குழாய் பழுது சரி செய்யப்பட்டு, நீர் அழுத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மீண்டும் கொதிகலன் இயக்கப்பட்டு, தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகிறது.

மேலும் இயந்திர பழுது ஏற்படா வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு நல்லமுறையில் ஆலை இயக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் பதில் அளித்தார்.