சிறப்பு செய்திகள்

செந்தில்பாலாஜிக்கு முகவரி தந்ததே கழகம் தான் – சட்டப்பேரவையில் முதல்வர் ஆவேசம்…

சென்னை:-

செந்தில்பாலாஜிக்கு முகவரி தந்தது அ.தி.மு.க தான் என்று முதல்வர் ஆவேசத்துடன் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில்  போக்குவரத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது கழக உறுப்பினர் பொன்ராஜ் திமுக ஆட்சிகாலத்தில் டீசல் மானியம் வழங்காதது குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் செங்கூட்டுவன், அதிமுக ஆட்சிகாலத்தில் போக்குவரத்து துறையில் உள்ள கடனை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துறையை அடமானம் வைத்தது தி.மு.க ஆட்சி. தற்போது எவ்வளவு கடன் சுமை உள்ளது என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம். அதற்கு அரசு அதிக நிதி தந்து பொற்கால ஆட்சியாக மாற்றியவர் அம்மா.

தற்போது திமுகவில் உள்ள செந்தில்பாலாஜி, அதிமுகவில் இருக்கும் போது பேரவையில் பேசும் போது, *தமிழ்நாட்டை பிச்சைப்பாத்திரமாக மாற்றியவர் கருணாநிதி. அட்சயப்பாத்திரமாக மாற்றியவர் அம்மா என்று பேசினார். அதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி சபை குறிப்பில் உள்ளதைத்தான்
அமைச்சர் பேசுகிறார். இதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் டி.ஜெயகுமார், பாத பூஜை செய்து திமுகவில் பதவி பெற்ற செந்தில்பாலாஜி உதிர்த்த முத்தைத் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு பதிவு செய்தார் என்றார். அமைச்சர்களின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு மத்தியில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவில் இருந்தபோது திமுகவை விமர்சித்த செந்தில்பாலாஜி தான் தற்போது திமுகவிற்கு வந்திருக்கிறார்.அதனால் திமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் செந்தில்பாலாஜி பேசியதை சுட்டிக்காட்டியுள்ளனர் என விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால் மறைந்த தலைவர்கள் குறித்து பேரவையில் பேசக் கூடாது என்று நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறிய கருத்துக்கள் அவைக்குறிப்பில் உள்ள கருத்துக்கள்
என்பதால் நீக்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க- தி.மு.க. உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர் ( செந்தில்பாலாஜி) 5 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளுக்கு சென்றவர். அவருக்கு முகவரியை தந்தது நாங்கள். ஏற்கனவே பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாகத் தான் அமைச்சர் பேசினார். இதில் தவறு இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்துவதற்காகத் தான் அமைச்சர் அப்படி பேசினார் என்றார்.

இது தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் ராஜா, அம்பேத்கர் குமார் ஆகியோர் அமைச்சர்களை பார்த்து ஆவேசத்துடன் சில கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். சில நிமிடங்களை கடந்து பேரவை துணை தலைவர் அமைச்சர் பேசும் போது பேசிய வார்த்தையில் முன்னாள் முதல்வர் என மாற்றிக்கொள்ளவும் என்றார். தொடர்ந்து பேரவை கூட்டம் நடைபெற்றது.