தற்போதைய செய்திகள்

குடிமராமத்து திட்டம் வரலாற்றில் இடம்பெறும் – சட்டப்பேரவையில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேச்சு…

மதுரை:-

எதிர்காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி முதலமைச்சர் குடிமராமத்து திட்டம் செய்தார் என்ற செய்தி வரலாற்றில் இடம் பெறும் என்று சட்டப்பேரவையில் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் மதுரை வடக்குத் தொகுதி உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது:-

முதலமைச்சர் மிக முத்தான துறையான நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகம், பொதுப்பணித்துறை ஆகிய அற்புதமான துறைகளிலேயே எனக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நாம் பள்ளியில் படிக்கும் போது அசோகர் மரம் நட்டார் என்ற பாடத்தை படித்துள்ளோம். அந்த செய்தி தான் இன்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது அதேபோல் எதிர்காலத்திலும் சரி, இன்றைக்கும் சரி முதலமைச்சர் குடிமராமத்து திட்டம் செய்தார் என்ற செய்தி வரலாற்றில் இடம் பெறும். அந்த அளவிற்கு ஒப்பற்ற அரசாக இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

அதனைப்போன்று தான் கோவில் இல்லாத ஊரே இருக்காது என்பார்கள். அதனைப்போன்று தான் போக்குவரத்து நெருக்கடியை போக்கிட இன்றைக்கு பல்வேறு உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எந்த ஊர் சென்றாலும் உயர்மட்ட பாலங்களே இல்லாத ஊர்களே இல்லை என்ற சிறப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னனாக இருந்தாலும் சரி, பாண்டிய மன்னனாக இருந்தாலும் சரி, சோழ மன்னனாக இருந்தாலும் சரி. இவர்கள் கட்டிட கலையில் எப்படி கவனம் செலுத்துகிறார்களோ அதனைப்போன்று தான் இன்றைக்கு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் எல்லாம் சிறப்பான வகையில் இடம் பெற்றிருக்கிறது

அது மட்டுமல்லாது முழுமையான தேசிய நெடுஞ்சாலை கிராம சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.11,130 கோடி செலவாகும் என்று எண்ணினாலும் கூட அதற்குள்ளே நாம் விரிவாக செல்லாவிட்டாலும் கூட எனக்கு கிடைத்த வாய்ப்பாக என்னைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய எதிர்க்கட்சி உறுப்பினர் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி தொடுத்தார். தென் மாவட்டத்தில் என்ன பணி நடைபெறுகிறது என்று கேட்டார். அதற்கு சரியான பதிலடியை இந்த மாமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

அந்த எதிர்க்கட்சி உறுப்பினருக்கு நான் ஒரு கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றோடு .முதலமைச்சர் பொறுப்பேற்று 29 மாதங்கள் ஆகின்றன. 30 வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறார். இந்த 29 மாதங்களில் அவர் சேலத்திற்கு அதிகமாக சென்றதில்லை. ஆனால் தென் பாண்டிய மண்டல தலைநகரான மதுரைக்கு மட்டும் 30 முறை வந்திருக்கிறார். எந்த முதலமைச்சரும் இதுபோன்று வந்தது கிடையாது.

ஒவ்வொரு முறை வருகின்ற போதும் ஒவ்வொரு திட்டங்களை வழங்கியும், செயல்படுத்தியும் உள்ளார். இது மட்டுமல்லாது மதுரை பாண்டி கோவிலிலிருந்து விருதுநகர் செல்வதற்கு 1 மணி நேரம் 80 நிமிடம் ஆகும். அல்லது அந்த பைபாஸ் சாலையிலேயே 2 மணி நேரம் போகலாம் ஆனால் 27 கிலோமீட்டர் உள்ள பைபாஸ் சாலையில் இன்றைக்கு 15 நிமிடத்திலேயே போகக்கூடிய அளவிற்கு ரூ.213 கோடி செலவில் சாலையை சிறப்பாக அமைத்திருக்கிறார்.

மேலும் ரூ.50 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆனையூர் வரைக்கும் சாலை அமைத்திருக்கிறார். உயர்மட்ட பாலங்கள், காளவாசல் உயர்மட்டப்பாலம், கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் அங்கே சுற்றுச்சாலைகளில் இருக்கிற உயர்மட்ட பாலங்கள் வரிசையாக எடுத்துக்கொண்டால், பெரியார் பேருந்து நிலையம் யானைக்கல் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மதுரை சிந்தாமணி கால்வாய்க்கான வளைவு பாலம் என்று பல்வேறு பாலங்கள் மதுரையை சுற்றி உயர்மட்ட பாலங்களாக அற்புதமாக அமைந்துள்ளன.

மதுரையில் ரூ.1000 கோடி அளவில் பல அற்புதமான திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் அற்புதமான நகராக மாறும் சூழ்நிலை உள்ளது. மதுரையில் சிநதாமணி கால்வாய், கிருதுமால் கால்வாய், சொட்டதட்டி கால்வாய், அனுப்பானடி கால்வாய் என 12 கால்வாய்கள் உள்ளது இதில் 10 கால்வாய்கள் ரூ.750 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பந்தல்கால்வாயை முதலமைச்சர் நிச்சயமாக சீரமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார். அதே போல் வண்டியூர் பூங்காவை சீரமைப்பதற்காக பல்வேறு திட்ட அறிக்கைகள் மாநில அரசுக்கு, சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மதுரை மேலூர், அம்பலகாரன்பட்டியில் சிட்கோ மூலம் இன்றைக்கு 36 ஏக்கர் நிலத்தை எடுத்து ரூ.18 கோடி செலவில் சிட்கோ வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சருக்கும், துறை அமைச்சருக்கும் நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

இன்றைக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் கூடுதலாக 900 வீடுகள் ராஜாக்கூருக்கும், ஆத்திகுளத்திற்கும் கிடைத்துள்ளன. அது மட்டுமல்லாது மதுரை மருத்துவக்கல்லூரியிலேயே ரூ.50 கோடி மதிப்பில் பயிலரங்கங்கள், கூடுதலாக ரூ.200 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ அரங்குகள், மருத்துவ கட்டிடங்கள் வந்திருக்கின்றன.

அதே போல் வரலாற்று சிறப்புமிக்க எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உருவாக்கியது மட்டுமல்லாது, முல்லைபெரியாறு அணையிலிருந்து குழாய் மூலமாக ரூ.1054 கோடி மதிப்பில் மதுரைக்கு குடிநீர்த் திட்டத்தை கொண்டு வந்தவர் முதலமைச்சர். இதன் மூலம் மதுரை மக்களுக்கு குடிநீர் பஞ்சமே வராது.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.