தற்போதைய செய்திகள்

நிலக்கோட்டை தொகுதியில் தேங்காய் நார் பதநீர் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் – சட்டப்பேரவையில், தேன்மொழி எம்.எல்.ஏ கோரிக்கை….

சென்னை:-

நிலக்கோட்டை தொகுதியில் தேங்காய் நார் பதநீர் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தேன்மொழி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நிலக்கோட்டை தொகுதி கழக உறுப்பினர் எஸ்.தேன்மொழி தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து பேசியதாவது:-

திண்டுக்கல்லில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அளித்த வாக்குறுதியின்படி நிலக்கோட்டை ஒன்றியம் அனைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு 12 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கிய முதலமைச்சருக்கும், வனத்துறை அமைச்சருக்கும், என் சார்பிலும் தொகுதி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலக்கோட்டை தொகுதியில் விடுபட்ட கிராமங்கள் அனைத்திற்கும் காவேரிக் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். நிலக்கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றி தர வேண்டும்.

நிலக்கோட்டை தொகுதியில் ஆண்கள் அரசு கலைக்கல்லூரி, விருவீடு பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். தொகுதிக்குட்பட்ட பட்டிவீரன்பட்டி பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதால் அங்கு தேங்காய் நார் மற்றும் பதநீர் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.

பெரியார் வைகை பிரதானக் கால்வாயில் குல்லி செட்டிப்பட்டி பகுதியில் உள்ள 11-ம் மடை கால்வாய் மதகுகளை மாற்றியமைத்தும், வரத்து வாய்க்கால்களில் சிமெண்ட் தளம் அமைத்து கொடுத்தால் இந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பலன் அடைவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயரும். குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும். எனவே சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும்.

வைகை பாசன கால்வாயிலிருந்து விராலிப்பட்டி வழியாக பழைய வத்தலகுண்டு செல்லும் பெரிய கண்மாய்க்கு சிறுபாசன வாய்க்கால் அமைக்க வேண்டும். இதேபோல் விராலிப்பட்டி ஊராட்சி ராமநாயக்கம்பட்டி வழியாக வைகை பாசன கால்வாயிலிருந்து சிறுபாசன கால்வாய் அமைக்க வேண்டும்.

நிலக்கோட்டை வட்டத்தில் எத்திலோடு கண்மாய், பிள்ளையார் நத்தம் மற்றும் மட்டப்பாறை கண்மாய்களில் நீர் நிரம்பும் அளவிற்கு சிவஞானபுரம், ஆலங்குளம் கண்மாயிலிருந்து தனிக்கால்வாய் அமைத்து சிறுகுளம் கண்மாய் உபரிநீர் வெளியேறும் இடம் வரை புதிய கால்வாய் அமைக்க வேண்டும். இந்த வரத்து கால்வாய் அனைத்தையும் சிமெண்ட் கால்வாய்களாக அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தேன்மொழி எம்.எல்.ஏ பேசினார்.