தற்போதைய செய்திகள்

நித்யானந்தாவை போல் தீவு வாங்கி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகலாம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் கிண்டல்

சென்னை

நித்தியானந்தா போல தனி தீவு வாங்கி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை மசோதா தாக்கலின்போது கழக உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது எந்த விதத்திலும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று உள்துறை அமைச்சர் உறுதியை அளித்துள்ளார். கழகம் எப்போதும் எதிர்க்க வேண்டிய விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும். ஆதரிக்க வேண்டிய விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும். இதுதான் அம்மா அரசின் தெளிவான நிலை. உள்துறை அமைச்சரின் உறுதியை ஏற்று நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். வேறு எந்த நிலையும் இதில் இல்லை.

ஒட்டுமொத்த குழப்பவாதி ஸ்டாலின். குழப்பமான கட்சி என்றால் அது திமுக. தான். ஜனநாயகத்தில் உள்ளாட்சி அமைப்பு என்பது பலம் வாய்ந்த ஒரு அமைப்பு. 2016-ல் அம்மா தீர்மானித்து நடத்தலாம் என்று குறிப்பிட்டபோது அப்போது நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கி, சட்டப்போராட்டம் நடத்தப்பட்டு ஒரு வழியாக உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தீர்ப்பளித்தது. முதலில் திமுக இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது அப்படி பேசிவிட்டு நேற்று ஒன்று இன்று ஒன்று என்று பேசுகிறார்.

அண்ணா அறிவாலயம் அவர்களுக்கு தற்போது வேண்டாத இடமாக போய்விட்டது. அவர் தந்தை அனைத்து கூட்டத்தையும் அங்குதான் நடத்துவார். பகுத்தறிவு கொள்கையில் மிகவும் பற்றாக உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தை கைவிட்டு விட்டார். இப்போது ஸ்டார் ஓட்டலில் தான் கூட்டத்தை நடத்துகிறார். அதில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறார். அதில் உள்ளாட்சித் தேர்தலை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றுவார். ஆனால் அதே நேரத்தில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்பார். எப்படிப்பட்ட மோசடியான, ஏமாற்று வேலையை,தெளிவாக செய்கிறார். எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என்று கவலையாக உள்ளது.

இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம் முதலமைச்சர் கனவு தான். அவருக்கு மட்டுமல்ல முதலமைச்சராக வேண்டும் என்று நினைப்பவர்கள் நித்தியானந்தா போல ஒரு பெரிய தீவு வாங்கி அங்கு உங்களை முதலமைச்சராக அறிவித்து கொள்ளுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர்களிடம் உள்ள பணத்திற்கு தீவு வாங்கி முதலமைச்சராக ஆகிவிடலாம். தமிழகத்தில் முதலமைச்சர் பதவி என்பது நிச்சயம் முடியாது. கழகத்தால் மட்டும் தான் முடியும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.