தற்போதைய செய்திகள்

குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் தரம் உயர்வு : வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதில்

திண்டுக்கல்

குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி.வி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. பி.பி. பரமசிவம் பேசியதாவது:-

வேடசந்தூர் சட்டமன்ற மக்கள் மீது முதலமைச்சர் வைத்திருக்கின்ற அன்பின் வெளிப்பாடாக குஜிலியம்பாறை தனி வட்டம் என்ற மகத்தான அறிவிப்பை தந்தார். அந்த அறிவிப்பு வந்த உடனேயே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அரசினுடைய கொள்கை முடிவாக, ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு தாலுகா மருத்துவமனை நிச்சயமாக வழங்கப்படும்.

ஆகவே, குஜிலியம்பாறையில் இருக்கும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை இந்த மாமன்றத்தில் தந்திருக்கிறார். அந்த வாக்குறுதிக்கு ஒரு சிறு நினைவூட்டலைத் தந்து, அங்கு செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு பதிலாக, கோட்டநத்தம் ஊராட்சி பகுதியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிதாக தந்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோர்களின் நலன் காக்க முன் வருவார்களா என்பதை அறிய விரும்புகிறேன்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்:-

வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் நினைவூட்டியதற்கு நன்றி. உறுப்பினர் நினைவூட்டியதற்கு முன்பே அது நினைவில் இருந்து வருகின்றது. அரசினுடைய கனிவான பரிசீலனை இருக்கின்றது. விரைவில் நல்ல செய்தி வரும் என்பதை சட்டமன்ற உறுப்பினருக்கு பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிலளித்தார்.