சிறப்பு செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் பலத்த கோஷத்துக்கு மத்தியில் திருவண்ணாமலையில் மகாதீப திருவிழாவையொட்டி 2668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் உச்சகட்டமாக நேற்று மாலை சரியாக 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் அரோகரா மகாதேவா என்ற கோஷத்துடன் மகாதீபம் ஏற்பட்டது.

மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு ேகாயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகாதீப மலைக்கு காட்டப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி தீபத்தை தரிசத்தினர். அரோகரா, அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் விண்ணதிரி கோஷம் எழுப்பினர்.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்றும், இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். மகா தீப திருவிழாவை காண திருவண்ணாமலையில் 25 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வெகு சிறப்பாக செய்திருந்தது. பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டன.