சிறப்பு செய்திகள்

பொறியியல் பட்டதாரிகள் இனி ஆசிரியர் ஆகலாம் – அரசாணை வெளியீடு

சென்னை

பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள் ஏராளமானோர் இப்போது வேலையில்லாமல் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு தான் புரட்சித்தலைவி அம்மாவின் வழிநின்று செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அரசு பொறியியல் பட்டதாரிகளுக்கு நல்ல ஊதியத்தில் வேலை அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

எந்திரங்களை உருவாக்குபவர்கள் பொறியாளர்கள். ஆனால் அதே எந்திர பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதை கண்டுபிடித்த பொறியாளர்களுக்கே வேலை கிடைப்பது அரிதாகி விட்டது. உலக அளவில் கல்வித்துறையில் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பள்ளி படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது மருத்துவ படிப்பையும், பொறியியல் படிப்பையும் தான். 10 ஆண்டுகளுக்கு முன்னர் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முயற்சி மேற்கொண்டனர். நன்கொடை என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் கல்லூரிகளில் சேர்ந்து பொறியியல் படிப்பு பயின்றார்கள்.

அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு படித்த உடன் நல்ல வேலை கிடைத்தது. அதன் காரணமாக தமிழகத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தோன்ற ஆரம்பித்தன. பள்ளி படிப்பை முடித்தவுடன் பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து விட்டதால் அவர்களுக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக பல பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைமை தான் நிலவுகிறது. 2015- 16-ம் ஆண்டுகளில் பி.எட். கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் பொறியியல் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் அதிகம் சேராததாலும், பொறியியல் படித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு செல்வதை விரும்பாததாலும் 20 சதவீத இடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி டெட் என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

டெட் என்னும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 6 முதல் 8 வகுப்புகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் போன்ற துறையில் ஆசிரியர் ஆகலாம் என சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ. பட்டப்படிப்புகளில் எந்த பிரிவில் பயின்றிருந்தாலும் இந்த டெட் தேர்வை எழுதலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணை பி.இ. பட்டதாரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என பல பொறியியல் பட்டதாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பெற்றோர்களும் தமிழக அரசின் இந்த அரசாணையை பெரிதும் வரவேற்று இருக்கிறார்கள். இந்த அரசாணையின் மூலம் ஏராளமான பொறியியல் பட்டதாரிகளுக்கு உரிய ஊதியத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.