தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்

சென்னை

குற்றங்களை தடுக்க காவல்துறை விழிப்புடன் செயல்படுவதால் பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சென்னை காவல்துறை சார்பில் தண்டையார்பேட்டையில் காவலன் செயலி விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆர்.கே.நகர் பகுதி ரங்கநாதபுரம், தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெரு, இளைய முதலி தெரு, பாரதி நகர், கைலாசம் தெரு, பவர்குப்பம், புதுமணை குப்பம், எச்.எல்.எல்.சுனாமி குடியிருப்பு, திலகர் நகர் உள்ளிட்ட குடிசைமாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 250 நவீன கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்து மேலும் 250- நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா உபகரணங்களை காவல்துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தமிழக மக்களுக்கும், தமிழக காவல்துறைக்கும் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.அதேப்போன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்று இன்று வரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொண்டிருக்கும் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தலைமையில் சென்னை காவல்துறையினர் குற்றங்களை தடுக்க பாய்ஸ் கிளப், ஈவ்டீசிங், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா, காவலன் செயலி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். மூன்றாவது கண்ணாக காவல்துறை செயல்படுவால் சென்னை மாவட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு மிக்கதாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

சென்னைையில் குற்றங்களை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் பலர் சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கோமராக்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ராஜேஷ் மக்கள் நலனில் அக்கறை கொண்டு 250 புதிய கேமராக்களை காவல்துறைக்கு வழங்கியுள்ளார். இதேப்போன்று தன்னார்வலர்கள் பலரும் சமூக அக்கறையோடு காவல்துறைக்கு வழங்க வேண்டும்.

மேலும் சி.சி.டி.வி, கண்காணிப்பு கேமரா மற்றும் காவலன் செயலி விழிப்புணர்வு மூலம் 50 சதவிதம் குற்றங்கள் குறைந்துள்ளது. இது வெற்றி திட்டமாகவும் அமைந்துள்ளது. சென்னையில் இதுவரை இரண்டரை லட்சம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது விரைவில் 3 லட்சமாக உயர்த்தப்படும். அதேபோன்று காவலன் செயலி இதுவரையில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து குறும்படம் மூலம் காண்பிக்கப்பட்டது. இதில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆர்.எஸ். ராஜேஷ் நினைவு பரிசு வழங்கினார். இதில் கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் கபில் குமார் சரட்கர், வண்ணாரப்பேட்டை மாவட்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி, திருவெற்றியூர் சரக உதவி ஆணையர் அனந்த குமார், ஆய்வாளர்கள் தெய்வேந்திரன், விஜயகுமார், ஆனந்தராஜ், ஆரோக்கியராஜ், தவமணி, உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.