தற்போதைய செய்திகள்

முதல்வர்,துணை முதல்வர் வழியை பின்பற்றி மக்களுக்கு பணியாற்றுவீர் – வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாழ்த்து

மதுரை

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழியை பின்பற்றி மக்களுக்கு பணியாற்றுவீர் என்று வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை வழங்கினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய பெருந்தலைவராக வெற்றிபெற்ற லதா ஜெகன், துணைத் தலைவராக வெற்றி பெற்ற வளர்மதி அன்பழகன், கல்லுப்பட்டி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றிபெற்ற சண்முகப்பிரியா பாவாடியன், துணைத் தலைவராக வெற்றி பெற்ற மு.முனியம்மாள், கள்ளிக்குடி ஒன்றிய பெருந் தலைவராக வெற்றி பெற்ற மீனாட்சி மகாலிங்கம், துணைத்தலைவராக வெற்றி பெற்ற கலையரசி, உசிலம்பட்டி தொகுதியை சேர்ந்த செல்லம்பட்டி ஒன்றிய பெருந்தலைவராக வெற்றி பெற்ற கவிதா ராஜா, துணைத்தலைவராக வெற்றிபெற்ற பசும்பொன் ஆகியோர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களை வாழ்த்தி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் நல்லாசியுடன் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு நீங்கள் வெற்றி பெற்ற உள்ளீர்கள்.‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று மக்களுக்காக வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவரின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும் தமிழக மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து அயராது உழைத்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர் வழியை நீங்களும் பின்பற்றி மக்களுக்கு பணியாற்ற வேண்டும். தினந்தோறும் மக்களை சந்தியுங்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். மேலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நிச்சயம் அதை முதலமைச்சர் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிச்சயம் நிறைவேற்றித் தருவேன். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைப்பதுதான் நமது லட்சியம். ஆகவே மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு நீங்கள் தொண்டாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், முன்னாள் சேர்மன் தமிழகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.