சிறப்பு செய்திகள்

சிறுபான்மையினரின் நலன் காக்க நானே களத்தில் நின்று போராடுவேன் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முழக்கம்

கோவை

சிறுபான்மையினரின் நலன் காக்க நானே களத்தில் நின்று போராடுவேன் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

குடியுரிமை பிரச்சனையில் சிறுபான்மையினருக்கு துணையாக நாங்கள் இருப்போம் ஒரு இஸ்லாமியர்கூட பாதிக்கப்பட விடமாட்டோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை மாவட்டம் சுகுணாபுரம், கரும்புக்கடை, குனியமுத்தூர், பி.கே.புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைகடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 மற்றும் விலையில்லாவேட்டி சேலைகளை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

முதல்வரும், துணை முதல்வரும் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக முதலமைச்சர் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட ஆணையிட்டார். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 9,70,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.129.96 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக குடும்ப அட்டைகள் வீதம் தலா 1000 ரூபாயும், விலையில்லா வேட்டி, சேலைகள் உள்பட வழங்கப்படுகிறது.

மேலும், பொங்கல் திருநாளில் இச்சிறப்புத் திட்டத்தினை யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தி சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றும் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டது. இம்முகாம்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சேர்ந்த சுமார் 35,000 குடும்ப அட்டைகள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.

நான் அமைச்சரான பிறகு பல்வேறு திட்டங்கள் கோவை மாவட்டத்தில் கொண்டு வந்துள்ளேன். கரும்புக்கடை பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுத்துள்ளோம். விடுபட்டுள்ள திட்டங்களும் விரைவில் நிறைவேற்றி தரப்படும். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான உயர்மட்ட பாலம் ஆத்து பாலத்தை தாண்டி அமையவுள்ளது. கோவை மாவட்டத்தில் பாலங்கள், சாலைகள், கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.

குடியுரிமை பிரச்சனை குறித்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான கழக அரசின் நிலையை சட்டசபையிலேயே முதல்வர் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். முதலமைச்சரை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து பேசியுள்ளனர். கோவை மாவட்டத்திலிருந்து பல்வேறு அமைப்பினரும் தமிழக முதல்வரை சந்தித்து பேசியுள்ளார்கள்.

தமிழக முதல்வர் டெல்லியில் உள்துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசின் நிலை குறித்து பேசியுள்ளார். குடியுரிமை பிரச்சனையில் இங்கிருக்கும் இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினருக்கு எந்த பிரச்சனை என்றாலும் நாங்கள் துணை நிற்போம். எனக்கும், கழக அரசுக்கும் என்றும் துணையாக நிற்கும் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது எங்களுக்கும்தான். இங்கு உள்ள ஒரு சிறுபான்மையினரிடமாவது ஆதாரம் கேட்டால்கூட சிறுபான்மையினருக்கு துணையாக நான் அந்த இடத்தில் இருப்பேன். ஒரு இஸ்லாமியர்கூட பாதிக்கப்படவிடமாட்டோம். இஸ்லாமியர்கள் அனைவருக்கும் துணை நிற்போம். பதவி எனக்கு முக்கியமில்லை. இது அரசியலுக்காக பேசவில்லை.

முத்தலாக் திட்டம் கொண்டுவந்தபோது நாங்கள் எதிர்த்து நின்றோம். இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ள ஹஜ் மானியம் ரூ. 6 கோடி பெற்றுத்தந்தோம். சிறுபான்மையின மக்கள் மீது புரட்சித்தலைவி அம்மா கொண்டிருந்த அக்கறை, காட்டிய பேரன்பு ஆகியவற்றை சிறிதளவும் குறையாமல் இந்த அரசு காக்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.