சிறப்பு செய்திகள்

மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் : அதிக இடங்களை கழகம் கைப்பற்றியது

சென்னை

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 515 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளில் கழகம் 214 இடங்களில் வெற்றி பெற்றது. 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் கழகம் 1789 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, கரூர், தருமபுரி, தூத்துக்குடி, தேனி, நாமக்கல், விருதுநகர், அரியலூர், கடலூர் ஆகிய 13 மாவட்ட பஞ்சாயத்துகளில் கழகம் அதிக உறுப்பினர்களை பெற்றிருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சரிசமமான உறுப்பினர்களை பெற்றிருந்தன. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை பதவியேற்றனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய 5 பதவியிடங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி  27 மாவட்டங்களிலும் 5 உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

இதையொட்டி தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 27 மாவட்ட ஊராட்சி தலைவர், 27 துணைத்தலைவர்களை தேர்வு செய்ய 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், 314 துணைத்தலைவரை தேர்வு செய்ய 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதேபோல் 964 கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கு 76 ஆயிரத்து 744 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. பகல் 11 மணிக்கு பிறகு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் பதவிகளை கைப்பற்றியவர்கள் விவரம் வெளிவர தொடங்கியது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்களை அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்றன. 1 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் 20 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் விபரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் அ.இ.அ.தி.மு.க. தேனி, கரூர், அரியலூர், ஈரோடு, தருமபுரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், சேலம் ஆகிய 11 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியது. தி.மு.க. 9 பதவிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

அதே சமயத்தில் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் பதவியிடங்களை அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. முடிவுகள் வெளி வரத் தொடங்கியதில் இருந்தே அதிக ஒன்றிய தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வே முன்னிலை வகித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 314 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் 175 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதில் 108 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை கழகம் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு 67 இடங்கள் தான் கிடைத்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் 26 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிமுக 14 இடங்களிலும், தி.மு.க. 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

இதேபோல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க. 150 இடங்களிலும், தி.மு.க. 135 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். அதேபோன்று சில கிராம ஊராட்சிகளிலும் துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெறவில்லை. ஒன்றிய ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்தது.

இருப்பினும் நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது 83 ஒன்றிய தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் சற்று மாற்றம் காணப்பட்டது. அதே சமயத்தில் கழகம் அதிகம் வெற்றி பெற்ற பகுதிகளில் எளிதாக தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது. அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கு 43 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவி மிக எளிதாக கிடைத்து விட்டது. 179 ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது.

தலைவர், துணைத்தலைவர் பதவிகளை பிடிப்பதற்காக சில இடங்களில் தி.மு.க. குதிரை பேரம் நடத்தியது. இதனால் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கியிருந்தனர். நேற்று காலை தான் அவர்கள் வாக்களிக்க வந்தனர். இருப்பினும் கழகம் தி.மு.க.வை விட அதிக இடங்களை கைப்பற்றி இருப்பது தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக இடங்களை கழகம் கைப்பற்றி இருப்பதை அறிந்து வாக்கு எண்ணும் இடங்களில் குழுமியிருந்த கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்பே பொங்கல் திருநாளை இந்த வெற்றியின் மூலம் கழகத்தினர் கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.