தமிழகம்

அமைச்சர் உதவியாளர் மறைவுக்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

சென்னை

கார் விபத்தில் அமைச்சரின் உதவியாளர் மரணமடைந்ததற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வீரபெருமாள்பட்டி கிராமம் அருகே, 11.1.2020 அன்று இரவு 12 மணியளவில் இலுப்பூரிலிருந்து பரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொலிரோ வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரமாக இருந்த மரத்தில் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரின் உதவியாளர் வெங்கடேசன் மற்றும் வாகன ஓட்டுநர் செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் செல்வம் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செய்தி குறித்து அறிந்தவுடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், உயரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும் நான் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை வீரபெருமாள்பட்டி அருகே ஏற்பட்ட எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது.

அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.