தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியின் போது உயிரிழப்பு காவல்துறையினர் மூன்று பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர் மூன்றுபேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜான்சன் என்பவர் 30.12.2019 அன்று ஆர்.டி மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த முருகதாஸ் 1.1.2020 அன்று வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அறிவுடைநம்பி என்பவர் 3.1.2020 அன்று விளந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது மயக்கமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் ஜான்சன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ், அறிவுடைநம்பி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடைநம்பி ஆகிய மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.