தற்போதைய செய்திகள்

நாகூரில் 462 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் வட்டம், நாகூர் சம்பாதோட்டம், செல்லூர் ஊராட்சி பகுதிகளில் 462 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம் வட்டம் நாகூர்-சம்பாதோட்டம், செல்லூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாக்களில் 462 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் பி நாயர் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தமிழக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தினை கொண்டு வர பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். அம்மா அவர்களது வழியில் தமிழக அரசு மீனவ சமுதாய மக்களின் மேல் முழுமையான அக்கறை கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

நாகப்பட்டினம் வட்டம், நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் சம்பாத்தோட்டம் பகுதியில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனத்தால் மொத்தம் 640 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அரசு புஞ்சை நிலத்தில் குடியிருக்கும் 111 குடும்பங்களுக்கும், தனியார் பட்டா நிலங்களில் வீடுகட்டித் தரப்பட்டு குடியிருக்கும் 73 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டித் தரப்பட்டு குடியிருக்கும் 215 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிட அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் வட்டம் செல்லூர் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 799 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 300 நபர்களுக்கு ஏற்கனவே பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் நலனுக்காகவும், மீனவர்களின் நலனுக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பழனிகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.எஸ்.கணேசன், இளவரசி, சுப்பையன், திலீபன், ஐவநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி பன்னீர், வட்டாட்சியர் அ.பிரான்சிஸ் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.