தற்போதைய செய்திகள்

மாயனூர் கதவணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…

கரூர்:-

கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கதவணை தலைப்பில் உள்ள பாசன வாய்க்கால்களான தென்கரை கால்வாய் மற்றும் கட்டளை மேட்டுவாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீரை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து விட்டார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குட்பட்ட மாயனூரில் அமைக்கப்பட்டுள்ள கதவணையின் தலைப்பில் உள்ள பாசன வாய்க்கால்களான தென்கரை கால்வாய் மற்றும் கட்டளை மேட்டுவாய்க்கால்களில் இருந்து விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தண்ணீரை திறந்து விட்டார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமை தாங்கினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, விவசாயிகளின் நலன் கருதி மாயனூர் கிராமத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள மாயனூர் கதவணையின் தலைப்பில் உள்ள பாசன வாய்க்கால்களான தென்கரை கால்வாய் மற்றும் கட்டளை மேட்டுவாய்க்கால்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாயனூர் கதவணையின் வலதுபுறம் தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுகட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டுவாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் பிரிந்து பாசன வசதியளித்து வருகிறது.

இதில் தென்கரை கால்வாயில் 7,132 ஏக்கர் நிலங்களும், கட்டளை மேட்டுவாய்க்காலில் 20,552 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. தற்சமயம் மேட்டூரில் 10,000கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பாசன நீர் மாயனூர் கதவணைக்கு 9,500கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதில் 8.50 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதில் தொடக்கத்தில் தென்கரை கால்வாயின் தலைப்பில் வினாடிக்கு 500 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப முதலமைச்சரின் அனுமதியோடு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள கிஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய வட்டங்களில் உள்ள பாசன விவசாயிகளின் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சரவணன், கரூர் நகர கூட்டுறவு சங்கத்தலைவர் திருவிக, கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பொரணி கணேசன், விநாயகம், கண்ணதாசன், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, வட்டாட்சியர் பழனி, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் கார்த்திக், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.