தற்போதைய செய்திகள்

கொத்தடிமை தொழிலாளர்முறை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றுபட்டு செயல்படுவோம் – அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள்…

சென்னை:-

கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று அமைச்சர் நிலோபர் கபீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, தியாகராயநகரில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு ஒரு நாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் துவக்கி வைத்து பேசியதாவது:-

கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம், 1976 மற்றும் மத்திய அரசின் கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு திட்டம் 2016 என்பது மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நிவாரணங்களை வழங்கி அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தினை அடைய ஏற்படுத்தப்பட்டதாகும். கொத்தடிமை தொழிலாளர் பற்றிய பொருண்மை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையிடமிருந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு 01.04.2017 முதல் தொழிலாளர் துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி பொருண்மை தொழிலாளர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட பின்பு கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தினை திறம்பட அமல்படுத்தும் பொருட்டு கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டெடுத்தல், விடுவித்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகியவை குறித்து மாநில செயல் திட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள்.21.09.2017-ல் அரசால் வெளியிடப்பட்டது. இந்த மாநில செயல் திட்டத்தின் அடிப்படையில், கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம், அமலாக்க அதிகாரிகளால் திறப்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து தொழிலாளர் உதவி ஆணையர்களும் அவர்களது நிர்வாக எல்லையில் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம், 1976 மற்றும் மத்திய அரசின் கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு திட்டத்தினை அமல்படுத்த ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறு வாழ்வு நிவாரண தொகையாக ரூ.20,000 மற்றும் குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை, பட்டா, வேலைவாய்ப்பு கல்வி, தொழிற்திறன் பயிற்சி, சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்படும் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்து உரிய திட்டங்களின் கீழ் பயன்களை அவர்கள் பெற்று வருகின்றனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆண் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், சிறப்பு பிரிவு பயனாளிகள் அதாவது பிச்சை எடுக்கும் தொழிலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கட்டாய குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ரூ.2 லட்சமும், திருநங்கைகள், ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 3 லட்சமும் மறுவாழ்வு நிவாரணத் தொகையாக வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2017-18-ம் ஆண்டில் 276 கொத்தடிமை தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டும், 2018-19-ஆண்டில் 352 கொத்தடிமை தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டும், மேலும் 01.04.2019 முதல் 31.07.2019 வரையிலான காலத்தில் 163 தொழிலாளர்கள் என மொத்தம் 791 கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூபாய் 121.48 லட்சம் உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாட்டினை கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.

பின்னர் தொழிலாளர் துறையில் கருணை அடிப்படையில் மூன்று நபர்களுக்கு பணி நியமான ஆணையை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்த கோபால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி, கூடுதல் ஆணையர்கள் பா.மு.சரவணன், யாஸ்மீன் பேகம், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் ,உதவி ஆணையர்கள் மற்றும் வருவாய்துறை, சமூக பாதுகாப்புத்துறை, காவல்துறை, தொழிலக பாதுகாப்பு துறை, நீதித்துறை , சமூக ஆர்வலர்கள் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.