தற்போதைய செய்திகள்

நாமக்கல் மாவட்டம் அம்மாவின் கோட்டை – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்

நாமக்கல்

மாவட்ட ஊராட்சி, ஒன்றியக்குழு தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாமக்கல் மாவட்டம் அம்மாவின் கோட்டை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.தங்கமணி பெருமிதத்துடன் கூறினார்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக 12-வது வார்டில் உறுப்பினர் ஆர்.சாரதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் 11 ஒன்றியங்களை கழகம் கைப்பற்றியுள்ளது. நாமக்கல், பள்ளிபாளையம், புதுச்சத்திரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, மோகனூர், மல்லசமுத்திரம், கொல்லிமலை, கபிலர்மலை, எருமப்பட்டி, எலச்சிப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர்களாக கழகத்தினர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். பரமத்தி ஒன்றியத்தில் போதிய கோரம் இல்லாததால் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பதவியேற்றுக் கொண்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா, நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து நாமக்கல்லில் அமைந்துள்ள கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உருவசிலைக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆர்.சாரதா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் கழக வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றிருப்பது நாமக்கல் மாவட்டம் அம்மா அவர்களின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக உரிய பங்கீடு செய்து கொண்டது. ஆனால், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை உள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியினரின் பேட்டியின் மூலம் தெளிவாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளை திமுக எப்பொழுதுமே மதிக்காது என்று தெரிவித்தார்.