தற்போதைய செய்திகள்

தமிழ் இனத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்கிறார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

மதுரை

தமிழ்இனத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கல்லுப்பட்டியில் நடைபெற்ற விழாவில் பேசினார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதியில் உள்ள கல்லுப்பட்டி ,பேரையூர், சந்தையூர், சிலைமலைபட்டி, குன்னத்தூர் பகுதிகளில் நடைபெற்றது. இதில் 27,969 குடும்ப அட்டைதாரர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், துணைபதிவாளர் மதி, மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, ஒன்றிய பெருந்தலைவர் சண்முகப்பிரியா பாவடியான், துணைத் தலைவர் முனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

கடந்த ஆண்டு சிறப்பான முறையில் பொங்கல் பரிசினை முதலமைச்சர் வழங்கினார். தற்போது இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறார்.நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அம்மாவின் கனவை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை உள்ளாட்சி தேர்தலில் வழங்கி இன்றைக்கு பெண்கள் அதிகளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர். தற்போது இந்த கல்லுப்பட்டி ஒன்றியத்தில் கூட தலைவரும், துணைத்தலைவரும் பெண்கள் தான் உள்ளனர்

அதேபோல் இந்த உள்ளாட்சித்தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் எங்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்தனர். ஆனால் மக்களோ நாங்கள் எல்லாம் அம்மாவின் பக்கம் தான் இருப்போம் என்று எங்களை கை விடாமல் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது ஸ்டாலின் தமிழினத்தின் பாதுகாவலர் என்று கூறுகிறார் ஆனால் அவரோ அவரது குடும்பத்தின் பாதுகாவலராக தான் உள்ளார்

5 முறை திமுக ஆட்சி செய்த போது இதுபோன்ற பொங்கல் பரிசினை தந்தது உண்டா? அதேபோல் முல்லைப் பெரியாறு, காவிரி, கச்சத்தீவு போன்றவற்றில் தமிழ் இனத்திற்கு அடுக்கடுக்கான துரோகத்தை தான் செய்தார்கள். இன்றைக்கு 2 கோடி குடும்பங்களுக்கு மேல் பொங்கல் பரிசு முதலமைச்சர் வழங்கி வருகிறார். பொங்கல் திருநாளை அனைத்து மதத்தினரும் கொண்டாடுகின்றனர். இதன் மூலம் அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளார்

அதேபோல் அம்மாவின் வழியில் இன்றைக்கு காவிரியை மீட்டுள்ளார் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தீர்வு கண்டுள்ளார் அதேபோல் கச்சத்தீவை மீட்க சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இதுபோல் தமிழ் இனத்துக்கும், தமிழ்மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் இரவு பகல் பாராது அயராது உழைத்து புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழினத்திற்கு பாதுகாப்பு அரணாக முதலமைச்சர் இருந்து வருகிறார் இவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்

அதுமட்டுமல்லாது தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி இதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதுபோன்று ஒரு விருது கூட திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தடை வந்தது. ஆனால் அம்மா ஆட்சியில் தான் பாரத பிரதமரை சந்தித்து வலியுறுத்தி ஜல்லிக்கட்டு போட்டி மீதான தடையை நீக்கி இழந்த தமிழர்களின் உரிமையைப் பெற்றுத் தந்தது அம்மாவின் அரசாகும். ஆகவே ஸ்டாலின் நாடகம் தமிழக மக்களிடத்தில் இனிமேல் எடுபடாது.

அதேபோல் மத்தியில் பல ஆண்டு அங்கம் வகித்த தி.மு.க தமிழக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு நமது முதலமைச்சர் பாரதப் பிரதமரிடம் வலியுறுத்தி எய்ம்ஸ் மருத்துவமனை, பஸ்போர்ட் இப்படி பல்வேறு மத்திய அரசு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் தமிழ் இனத்திற்கு யார் நன்மை செய்து வருகிறார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். இனிமேல் வருங்காலங்களில் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். முதலமைச்சருக்கு தமிழக மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.