தற்போதைய செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மகிழ்ச்சி

கரூர்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கும் செல்லும் 15 புதிய நகர பேருந்துகளை கரூர் பேருந்து நிலையத்தில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியவைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் உத்தரவின்பேரில் கரூரின் நகரப்பகுதிகளில் இயங்கும் வகையில், 13 வழித்தடங்களுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான 15 புதிய நகர பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அம்மா அவர்களின் அரசின் சார்பில் 5,000 புதிய பேருந்துகள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 பேருந்துகள் புதிதாக இயக்கப்படும் என்று முதலமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அதனடிப்படையில், பயனிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து வசதிகளுடனும் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.

படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள், இருக்கை மட்டும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள், குறைந்த தூரத்தில் இயங்கக்கூடிய பேருந்துகளில் குளிர்சாதன வசதி, முதியவர்களும் உடல்நல குறைபாடுடையவர்களும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறையுடன் கூடிய பேருந்துகள், மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேருந்துகள், நகர பேருந்துகள் என அனைவரின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக புதிய பேருந்துகள், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கக்கூடிய வகையில், தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழக போக்குவரத்துத்துறையை மேம்படும்தும் வகையில் அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.