சிறப்பு செய்திகள்

நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

நொய்யல் ஆற்றை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் அனைத்து நீர்நிலை பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் பருவமழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிவதை கொண்டாடும் வகையில் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘மாமழை போற்றுதும்’, என்ற நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு குளங்கள் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்புக்காக சேவையாற்றிய தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் போதிய அளவிற்கு மழை பெய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகிறது. நீர்நிலைகளை தூர்வாரவும், குடிமராமத்து பணிகளுக்காகவும் தமிழக அரசு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க சிறப்பாக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் கொடுங்கையூர், கோயம்பேடு பகுதிகளில் கழிவுநீரை சுத்திகரித்து 90 எம்எல்டி. தண்ணீரை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.230 கோடியில் நொய்யல் ஆற்றை தூர்வாரி சீரமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு இதற்கான நிதியை ஒதுக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. குறிச்சி குளமும் தூர்வாரி சீரமைக்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

ரூ.1500 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அடிக்கல் நாட்டி முதல்வர் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் விடுபட்ட பகுதிகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு- நல்லாறு, பாண்டியாறு- புன்னம்புழா திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ரூ.50 கோடி செலவில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் நீர்நிலைகளில் குடியிருந்த பத்தாயிரம் குடும்பத்தினருக்கு மாற்று இடங்களில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை போன்று கோவையிலும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.அவிநாசி ரோட்டில் கோவை உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை 9.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. உக்கடம் ஆத்துபாலம், கவுண்டம்பாளையம், சுங்கம் இராமநாதபுரம் மேட்டுப்பாளையம் சாலை, ஈச்சனாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட குளங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக இடம்பெறும். ஆறுமாத காலத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, சிறுதுளி நிர்வாகி வனிதா மோகன், நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.அன்பரசன் மற்றும் அனைத்து நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.