சிறப்பு செய்திகள்

முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் ஒரேநாளில் 14 ஆயிரம் மனுக்கள் குவிந்தன – உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சேலம்:-

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் நேற்று முன்தினம் ஆத்தூர், ஏற்காடு முதலிய தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது ஒரே நாளில் 14 ஆயிரம் மனுக்கள் முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டன. அவற்றை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் உடனடியாக அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இத்திட்டத்தை சேலம் மாவட்டம் கெங்கவள்ளியில் கடந்த 19-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேற்று  ஆத்தூர் மற்றும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக முதலமைச்சரும் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு கண்டார். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 14 ஆயிரம் மனுக்கள் குவிந்தன. இந்த மனுக்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரிகளிடம் வழங்கி உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

ஆத்தூர் மற்றும் ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், இங்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பம்மா சமுத்திரத்தில் ரூபாய் 5 கோடி செலவிலும், அம்மாபாளையத்தில் ரூபாய் 5 கோடி செலவிலும், கல்பகனூரில் ரூபாய் 4.25 கோடி செலவிலும், நரசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 4.60 கோடி செலவிலும் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆத்தூர் நகராட்சிப் பகுதியின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் அயோத்தியாப்பட்டினம் அருகே குடிநீர்க் குழாய் மாற்றியமைக்கப்படும். ஆத்தூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக மேட்டூரிலிருந்து பாதுகாக்கப்பட்ட காவேரித் தண்ணீர் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக, சாதாரண மக்களும் தனியார் மருத்துவமனைக்கு சென்று உயர்தர சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றோம். சேலம் மாவட்டத்தில் தான், அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கப்பட்டு, அதிக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி அவர்கள் தொழில் துவங்கும் நிலையை உருவாக்கியதும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் நான்கு சதவீதம் கொடுத்ததும் அம்மாவின் அரசு தான். விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததும் அம்மாவின் அரசு தான். மேலும், இத்தொகுதியில் நடைபெறுகின்ற சில பணிகளை குறிப்பிட விரும்புகிறேன்.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ரூபாய் 240 கோடி மதிப்பீட்டில் 28,519 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருவாய்த் துறை சார்பில் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் மூலம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரத்தில் 2 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மல்லியக்கரை மற்றும் ஆரியபாளையம் ஆகிய பகுதிகளில் 2 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு சுமார் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 112 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் மற்றும் 268 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ரூபாய் 3.15 கோடி மதிப்பீட்டில் 6.350 கி.மீ. சாலைப் பணிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆத்தூர் அம்மம்பாளையம்-நரிக்குறவர் காலனி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே ரூபாய் 5.00 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய உயர்மட்டப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூபாய் 8.26 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயப் பெருமக்களுக்கு பயிர்க் கடன், மத்திய காலக் கடன், நகைக் கடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடனுதவியாக 7,00,540 நபர்களுக்கு ரூபாய் 2,170.65 கோடி வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் 3,287 பயனாளிகளுக்கு 13,148 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு சுயமாகபொருளாதாரத்தை ஈட்டக்கூடிய சூழ்நிலையை அம்மாவின் அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.

விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 250 பயனாளிகளுக்கு 250 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூபாய் 2.33 இலட்சம் மதிப்பீட்டில் 194 கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள கிராமப்புற பெண்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் மூலம் 350 பயனாளிகளுக்கு ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. 9 கால்நடை மருந்தகங்களுக்கு ரூபாய் 1.89 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைத் துறை சார்பில் ரூபாய் 14.51 கோடி மதிப்பீட்டில் 40,003 விவசாயிகளுக்கு விவசாயப் பண்ணை இயந்திரங்கள், விதைகள், சொட்டுநீர் பாசன மானியம், இடுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சுமார் 3.50 கோடி மதிப்பீட்டில் 6,146 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டு நீர்ப் பாசன மானியம், காய்கறி விதைகள், பழச் செடிகள், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பருவ மழை பொய்த்ததின் காரணமான, தோட்டக் கலை பயிர் சாகுபடி செய்த 4,142 விவசாயிகளுக்கு ரூபாய் 2.40 கோடி வறட்சி நிவாரண இடுபொருள் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் ரூபாய் 95.33 கோடி மதிப்பீட்டில் 336 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூபாய் 25.98 கோடி மதிப்பீட்டில் 23,467 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ரூபாய் 6.49 கோடி மதிப்பீட்டில் 18,801 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. 27 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

கல்லாநத்தம், உமையாள்புரம் தவளப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆத்தூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிய சுகாதார மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 198.75 கோடி மதிப்பீட்டில் 211 புதிய பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

படித்த ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவிடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,642 பயனாளிகளுக்கு ரூ. 6.60 கோடி நிதியுதவியும், 11,464 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவிடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,753 பயனாளிகளுக்கு ரூபாய் 8.76 கோடி நிதியுதவியும், 8,204 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 919 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூரிலிருந்து வருகின்ற உபரி நீரை கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் நீரேற்று மூலமாக நிரப்புவது குறித்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்குவதும், தடையில்லா மின்சாரம் வழங்குவதும் அம்மாவின் அரசு தான். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது கடுமையான மின்வெட்டு இருந்த காரணத்தினால் தொழில் வளம் பாதித்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், நான் முதலமைச்சரானால் தமிழ்நாட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவேன் என்று தெரிவித்ததுடன், முதலமைச்சரானவுடன் அதை நிறைவேற்றியும் காண்பித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் என்ன நடைபெற்றுள்ளது? என்று கேட்கிறார்.தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அம்மாவின் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 352.63 கோடி மதிப்பீட்டில் 45,477 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆத்தூர் வட்டத்திலிருந்து பிரித்து பெத்தநாயக்கன்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு ரூபாய் 2.62 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. வாழப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரூபாய் 2.44 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.கூட்டாத்துப்பட்டி, மஞ்சக்குட்டை, குன்னூர் மற்றும் சூலாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாக 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ரூபாய் 9.24 கோடி மதிப்பீட்டில் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 272 கோடி மதிப்பீட்டில் 472 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூபாய் 8.70 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புழுதிக்குட்டை-சந்துமலை சாலையில் புங்கமடுவு அருகிலும், அயோத்தியாபட்டினம்-பேளூர்-கிழாக்காடு சாலை, தும்பல் அருகிலும் தலா ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய உயர்மட்டப் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 210 ஊரக குடியிருப்புகளுக்கு ரூபாய் 8.97 கோடி மதிப்பில் தனி மின்விசைத் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியங்களில் 83 பள்ளிகள், 71 அங்கன்வாடி மையங்கள், 5 மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு ரூபாய் 39 இலட்சம் மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை சார்பில் விவசாய பெருமக்களுக்கு பயிர் கடன், மத்திய கால கடன், நகைக் கடன். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த மகளிருக்கான கடன் என மொத்தம் 8,81,420 நபர்களுக்கு ரூபாய் 3,082.27 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன.வேளாண்மைத்துறை சார்பில் ரூபாய் 15.40 கோடி மதிப்பீட்டில் 79,160 விவசாயிகளுக்கு விவசாய பண்ணை இயந்திரங்கள், கருவிகள், விதைகள், சொட்டு நீர் பாசன மானியம், இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூபாய் 23.71 கோடி மதிப்பீட்டில் 11,197 விவசாயிகள் பயன்பெறும் வகையில் சொட்டுநீர் பாசன மானியம், காய்கறி விதைகள், பழச்செடிகள், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஏற்காடு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த நெய்யமலை, விலாரிப்பாளையம், துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, நாகலூர், டி.பெருமாபாளையம், வாய்க்கால் பட்டறை, ராமலிங்கபுரம், நீர்முள்ளிக்குட்டை ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், கூட்டாத்துப்பட்டி மற்றும் வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், ரூபாய் 22.59 கோடி மதிப்பீட்டில் 167 புதிய பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகங்கள், வகுப்பறைகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி பயில அம்மாவின் அரசு கருமந்துறையிலும், ஏற்காட்டிலும் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் திறந்து சிறப்பான கல்வியை வழங்கி வரும் அரசு அம்மாவின் அரசு.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளிலும், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி தலைவாசலிலும், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆத்தூரிலும், ஏற்காடு சட்டமன்றத் தொகுதி வாழப்பாடியிலும் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்களில் 19.08.2019 அன்று 4,062 மனுக்களும், 20.08.2019 அன்று 9,234 மனுக்களும் என மொத்தம் 13,296 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.