சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

கொடியவர்களால் படுகொலை செய்யப்படட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் நேரில் வழங்கினார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், 8.1.2020 அன்று இரவு இரண்டு நபர்களால் கைத்துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்படும் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு சிறப்பினமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் 8.1.2020 அன்று இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை, இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்றும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பினமாக அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் 10.1.2020 அன்று அறிவித்தார். அதன்படி, உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு சிறப்பினமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் க.சண்முகம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.