சிறப்பு செய்திகள்

அம்மா இளைஞர் விளையாட்டு குழு – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை

சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுக்குழு அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் 9.7.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், கிராமங்களில் உள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மன வளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், மற்றும் வெளிக்கொணரவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் “அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்.

அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக “அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும். மேலும், அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் அல்லது பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளை ஊராட்சி ஒன்றிய / மாவட்ட / மாநில அளவில் நடத்துதல், போன்ற இனங்கள் செயல்படுத்தப்படும்.

இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டுத் திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.