சிறப்பு செய்திகள்

பெண் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலம் – முதலமைச்சர் பெருமிதம்…

ஈரோடு:-

ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:-

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக் குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி

என்ற மகாகவியின் பாடல் வரிக்கிணங்க, ஈரோடு பகுதியில் உள்ள பெண்கள் உயர்கல்வி படிக்க அருகிலுள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் நிலையை மாற்றியமைத்து, பெண் கல்வி சிறந்து, சமுதாயம் செழித்து மலர்ந்திடவும், நாட்டில் நன்னெறி உயர்ந்திடவும், பெண்கள் கல்லூரி ஒன்று ஈரோட்டில் துவங்கிட நல்ல மனம் படைத்த சான்றோர் பலர் சிந்தித்ததின் விளைவாக 24.10.1969ல் வேளாளர் கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனம் எடுத்த அயராத முயற்சியின் காரணமாக, 1970 ஜூலை திங்களில் ஈரோட்டில் உள்ள திண்டலில் வேளாளர் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் அறிவு ஒளி பெற்று வருகின்றனர். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து துவக்கப்பட்ட வேளாளர் கல்வி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

“பெண்குலம் சிறக்காமல் உலகத்திற்கு நல்ல காலம் இல்லை. ஒரே இறக்கையுடன் பறவை பறக்க முடியாது” என்றார் சுவாமி விவேகானந்தர்.இந்த கல்லூரி நிர்வாகம் முதலில் மகளிர் கல்லூரியை துவக்கி, பின்னர் அதோடு நின்றுவிடாமல் பெண்கள் அனைவரும் அனைத்துவிதமாக கல்வி பயில வசதியாக பள்ளிகள், கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், செவிலியர் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவது பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆரம்பத்தில் 280 மாணவியரை கொண்டு துவக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்று பல்வேறு பாடப் பிரிவுகளில் 6,300-க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயில்கிறார்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த நிறுவனம் ஆரம்பித்த பிற கல்வி நிலையங்களில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருவது மிகுந்த வியப்பை அளிக்கின்றது.

சீரிய நோக்கோடும், சிறந்த லட்சியத்துடனும் அன்று விதைத்த விதை இன்று ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி விரிந்து, பரந்து, விழுதோடி, தரணி போற்றும் தனிப்பெரும் கல்லூரியாக திகழ்ந்து, தலைநிமிர்ந்து நிற்பதற்கு, வேளாளர் கல்வி நிறுவனத்தினரின் அயராத உழைப்பும், விடாமுயற்சியும்தான் காரணம் என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் அனைவருக்கும் தங்கு தடையின்றி தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.உயர்கல்வியின் மூலம் மிகவும் துடிப்பான, அறிவார்ந்த சமுதாயத்தினை உருவாக்குவதும், சமமான, தரமான உயர்வாக்கம், சிறப்பான, உலகளாவிய போட்டித் திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை தனிச்சிறந்த சக்தியாக உருவாக்குவதே தமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.

உயர்கல்வி மூலம் தற்போதுள்ள மனித வளத்தினை மேம்படுத்தி, திறன் வாய்ந்த தொழில்களை போதுமான எண்ணிக்கையில் உருவாக்கி, தமிழ்நாட்டை உலகளாவிய ஒரு மையமாக மேம்படுத்திட, மாற்றிட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர்கல்வித்துறையின் கீழ் 13 மாநில பல்கலைக்கழகங்கள், 829 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 718 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், 585 பொறியியல் கல்லூரிகள், 520 பலவகை தொழில்நுட்ப, உணவக மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பப் பயிலகங்கள் செயல்படுகின்றன.

ஏழை மாணாக்கர்களின் கல்வியில் கவனம் செலுத்தி, முதல் தலைமுறையில் கற்கும் இளைஞர்களுக்கு கல்வி கற்க ஆர்வம் ஊட்டுதல், தரமான இலவச கல்வியை அளித்தல், தமிழ் வழி கற்கும் மாணாக்கர்களுக்கு உதவித் தொகை அளித்தல், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், சிறப்பு உதவித் தொகை வழங்குதல், கட்டணமில்லா விடுதிகள், விலையில்லா பேருந்து பயண அட்டை, பள்ளிகளிலேயே விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டிகள் அளித்து, அவர்கள் உயர்கல்வி பயில அம்மாவின் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

2011-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்கின்றபொழுது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 32 சதவிகிதம்.அம்மா அவர்கள் 2011-லிருந்து எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கல்விக்கு ஏராளமான திட்டங்கள், சலுகைகளை அறிவித்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்து, கல்வி புரட்சி செய்ததின் விளைவாக கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து இம்மாநிலத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை இன்று 48.6 சதவிகிதமாக உயர்ந்து இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அகில இந்த அளவில், உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 25.8 சதவிகிதம். ஆனால், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48.6 சதவிகிதம் என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

2018-19-ம் கல்வியாண்டில் புதிய பல்வகை தொழில் நுட்ப கல்லூரிகளை அரசு தொடங்கியதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் திரும்பி வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டிற்கு 460 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 10 மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் 65 அரசுக் கலைக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 382 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று எண்ணிலடங்கா திட்டங்களை உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்ல, கிராமத்தில் வாழ்கின்ற ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகளுக்காக புதிய பள்ளிகளை அம்மா அரசு திறக்கின்றது. மேலும், பள்ளிகளை தரம் உயர்த்தியதன் விளைவாக, மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தற்போது உயர்ந்திருக்கின்றது. இதற்கு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கல்வியில் செய்த புரட்சி தான் காரணம் என்பதை சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்று வெற்றிவேற்கை தெரிவிக்கிறது. ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தாலும் கல்வி கற்க முயல வேண்டும். இதனை கூறுகையில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.மதராஸ் செனட் ஹவுஸ் 1898-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், கொஞ்சம் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார் ஒற்றை பெண்மணி. தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி என்கிற அறிமுகத்துடன் அவரது பெயர் அழைக்கப்பட, தடுமாறி மிகுந்த பயத்துடன் மேடை ஏறினார். அவரை பல்கலைக்கழக வேந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார் கல்லூரி பேராசிரியர். அந்தப் பெண் பி.ஏ.பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் பெறும் சமயம் அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அவர்தான் கமலா ரத்தினம் சத்தியநாதன்.

1879-ம் ஆண்டு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த கமலா ரத்தினம் சத்தியநாதன் பள்ளிபடிப்பு முடிந்தவுடன் இளங்கலை வகுப்பில் பயின்றதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பட்டதாரி பெண் ஆவார். பின்னர் இவர் சத்தியநாதன் என்ற ஒரு பேராசிரியரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். அவரது கணவரின் தூண்டுதலின்படி 1901-ம் ஆண்டு எம்.ஏ. தேர்வு எழுதி ‘தென்னிந்தியாவின் முதல் முதுகலைப் பெண் பட்டதாரியானார்’. பின்னர், இவர் 1901-ம் ஆண்டு ‘இந்தியன் லேடீஸ் மேகசீன்’ என்ற பத்திரிகையை தொடங்கினார். இந்தியாவில் பெண் ஒருவரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் பெண் பத்திரிகை இதுவே.

பின்னர் இவரது வாழ்க்கையில் சோதனைகளாக குடும்பத்தில் பல இழப்புகள் ஏற்பட்டன. அதனைக் கண்டு மனம் தளராமல் 1919-ம் ஆண்டு தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வேண்டும் என்பதற்காக தனது வீட்டை விற்று, இங்கிலாந்து நாட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்றார். இங்கிலாந்தில் அவரது மகன் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை இருந்து பின்னர் நாடு திரும்பினார். தன் மகனுடன் இந்தியா முழுக்க ஒரு கலெக்டரின் தாய் என்ற அடையாளத்துடன் பயணம் செய்தார்.

பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று எதிர்ப்பு இருந்த அந்தக் காலத்திலேயே, அந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றதோடு மட்டுமல்லால், பெண்கள் உரிமையை காக்க பத்திரிகை நடத்தி, மகளிருக்காக சமூக நிறுவனங்களை நிறுவிய கமலா சத்தியநாதன் போன்று நீங்களும் வாழ்வில் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வர ஒரு தூண்டுகோலாகத் திகழவேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவிகள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கவேண்டும். உங்களது பெற்றோர்கள் உங்கள் வாழ்வு சிறக்க பல கனவுகள் காண்கின்றார்கள். அவர்களின் கனவை நனவாக்க நீங்கள் பாடுபட வேண்டும். உங்களுக்கு சமுதாய பொறுப்பு இருக்கிறது. எளிதாக தட்டி கழித்து விட முடியாத பொறுப்பு உள்ளது. உங்களை வளர்த்துவிட்ட நிறுவனத்திற்கும், உங்கள் மாநிலத்திற்கும், தேசத்திற்கும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். நமது குறிக்கோள் கல்வியை நல்ல முறையில் கற்பது.

பின்னர் நாம் படித்த இந்த கல்வியை கொண்டு, நாட்டிற்கு நல்லது செய்வதாகும்.ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்த்தல், நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்ய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துத்தல், நீர்வள ஆதார இயக்கம் பற்றி மக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், நாட்டின் நலனில் அக்கறையுள்ள ஒரு நல்ல குடிமகனாக தங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

உயர்கல்வி வாய்ப்பின்றி கிராமங்களில் இருந்த பெண்களுக்கு இந்தப் பகுதியில் அரியதொரு வாய்ப்பளித்த வேளாளர் கல்லூரியின் பொறுப்பாளர்களுக்கு எனது பாராட்டுதல்களையும், இந்த கல்லூரி மேன்மேலும் உயர்நிலை அடையவேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.1969-ம் ஆண்டு இந்த வேளாளர் மகளிர் கல்லூரியை ஆரம்பிக்க அடித்தளமாக விளங்கிய மரியாதைக்குரிய மறைந்த கைலாச கவுண்டர், மறைந்த முன்னாள் எம்.எல்.சி செங்கோட்டை வேலப்ப கவுண்டர், மறைந்த பி.கே.பொன்னுசாமி கவுண்டர் மற்றும் துரைசாமி கவுண்டர் ஆகியோரை நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். மறைந்த துரைசாமி கவுண்டர் 25 ஆண்டுகாலம் தாளாளர் பதவி வகித்து கல்லூரி வளர்ச்சிக்கு தன்னுடைய அர்ப்பணிப்பை வழங்கி பெரும் பங்களித்துள்ளார் என்பதை தெரிவித்து அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இந்தக் கல்லூரி வாயிலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

ஈரோடு மாவட்டத்திற்கான திட்டங்களை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்: கல்லூரி மாணவிகளாகிய நீங்கள் அம்மாவின் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விபரங்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது சரியாக இருக்குமென்ற காரணத்தினால் இந்த விளக்கத்தை தருகின்றேன்.ஈரோடு நகரத்தில் அரசு மருத்துவமனை அருகில் ரூபாய் 58 கோடியே
54 லட்சம் மதிப்பீட்டிலான மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு-பெருந்துறை-காங்கேயம் சாலையில், காளிங்கராயன் இல்லத்திலிருந்து திண்டல்மலை வரை ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் சுமார் 5.5 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது, விரைவில் அப்பணி துவங்கும். நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில் பள்ளிப் பாளையத்தில் ரூபாய் 29 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் ஒரு உயர்மட்டப் பாலம் கட்டித் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் தொட்டிபாளையம் ரயில் நிலையங்களுக்கிடையே ரூபாய் 10 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாஸ்திரி நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

ஈரோடு நகரத்திற்கு ரூபாய் 76.2 கோடி மதிப்பிலான வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியில் எஞ்சியுள்ள 10 சதவிகித பணிகள் நிறைவு பெற வேண்டிய நிலையில், சில நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால் அப்பணி நிலுவையில் உள்ளது, நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன் அந்த வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டு, நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை உருவாக்கப்படும். சத்தி, அத்தாணி, பவானி சாலையில் ரூபாய் 2.2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் கட்டப்படுகிறது.

பவானியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். கோபியிலிருந்து சித்தோடு வரை 4 வழிச் சாலை அமைப்பதற்கு ரூபாய் 270 கோடியிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் துவங்கப்படும்.சித்தோடு முதல் வீரப்பன்சத்திரம் வரையிலான சாலை, மாநில அரசாங்கத்தால் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும். கோபிசெட்டிப்பாளையத்திற்கு புறவழிச் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கரட்டடிப்பாளையம், பங்களா புதூரில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 70 ஆண்டுகள் பழமையான பாலத்திற்கு மாற்றாக புதிய உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூபாய் 14.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்படவிருக்கிறது.ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் சாலையில், திண்டல் சந்திப்பிலிருந்து வில்லரசம்பட்டி வழியாக ஊட்டி, கோத்தகிரி, சத்தி, ஈரோடு சாலையில் கண்ராத்தாங்குளம் அருகே சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலை பல்வழித் தடமாக ரூபாய் 22.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டம் புள்ளிக்கல் பாலத்தை இணைக்கும் வகையில் காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.மாநிலச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பவானி, மேட்டூர் வழியாக தொப்பூர் வரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும்.

மேட்டுப்பாளையம் முதல் பவானி வரை ஏற்கனவே உள்ள இரு மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து மாவட்ட நெடுஞ்சாலை (15) மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை (82), சுமார் 98 கி.மீ. நீளத்திற்கு மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 77 கி.மீ. நீளமுள்ள பவானி முதல் கரூர் வரையுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையும் விரைவில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும்.

ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 67.76 கோடி மதிப்பீட்டில் உயர் சிகிச்சையுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்ட மருத்துவமனை மூலம் ரூபாய் 84.50 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் நடைபெற்று வருகின்றன.கணக்கம்பாளையம் கிராமத்தில் ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் ஏரி அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதியும், 1800 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் மறைமுக கிணறுகள் நீர் செறிவூட்டுவதன் மூலம் பயன்பெறும்.

பவானி வட்டம், ஜம்பைக்கு அருகில் பவானி ஆற்றின் குறுக்கே ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப் படவுள்ளது. ஈரோடு, ஊராட்சிக் கோட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு மாநகராட்சிக்கு வழங்குவதற்கான குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன, எஞ்சியுள்ள பணிகளும் மூன்று அல்லது நான்கு மாத காலங்களுக்குள் நிறைவு பெற்று என்னால் துவக்கி வைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். மேலும், ஈரோடு மக்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம், அழியாச் செல்வம் கல்விச் செல்வம் ஒன்று தான். ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் மற்றவர்கள் களவாடி விடுவார்கள். நம் உயிர் இருக்கின்றவரை ஒட்டி இருக்கின்ற ஒரே செல்வம் கல்விச் செல்வம் மட்டும் தான்.

அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வேளாளர் மகளிர் கல்லூரி உங்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றது, அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன். பொருள் இருப்பவர்களுக்கு அந்த ஊரில் தான் செல்வாக்கு இருக்கும். ஆனால், கல்வி கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் பெருமை, சிறப்பு இருக்கும். அந்தச் சிறப்பை இந்தக் கல்லூரியின் மூலமாக நீங்கள் பெறவேண்டும் என்ற அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

நாங்கள் படிக்கின்றபொழுது நடந்தே சென்று பள்ளியிலே படித்தோம். நான் படிக்கின்றபொழுது எங்கள் ஊரிலேயிருந்து ஆற்றைக் கடந்து பவானி வந்து நான் படித்துக் கொண்டிருந்தேன், ஆற்றிலே தண்ணீர் நிறைந்துவிட்டால் பரிசலில் சென்று படிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கின்றது. குறித்த காலத்தில் நீங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியும், சிறந்த கல்வியை கற்க முடியும். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது அரசாங்கம் நிறைய சலுகைகளை கொடுக்கிறது.

யூடியூப், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளாகிய நீங்கள் மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ வேண்டும். மாணவிகள் உயர்கல்வி படித்து, மென்மேலும் வளர்ந்து உங்கள் பெற்றோர்களுக்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி, பொன்விழா கொண்டாடுகின்ற வேளாளர் கல்வி அறக்கட்டளை சிறந்து விளங்கி, நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று வாழ்த்தி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.