திருவள்ளூர்

பொன்னேரி தாலுகாவில் 29 இடங்களில் முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர்வு முகாம் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பங்கேற்பு…

திருவள்ளூர்:-

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமம் உட்பட 29 கிராமங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பெற்றார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு மக்கள் குறை தீர்வு திட்டத்தை துவக்கி வைத்து ஒவ்வொரு வருவாய் கிராமங்களில் பல்வேறு குறைகள் சம்பந்தமாக புகார் மனுக்கள் கொடுத்தால் ஒரு மாதத்திற்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் . இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு திட்டத்தை துவக்க ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் பொன்னேரி தாலுகாவில் 29 கிராமங்களில் அதிகாரிகள் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நிகழ்ச்சி துவக்கி வைத்தார். இந்த குறை தீர்க்கும் முகாமில் கோட்டாட்சியர் நந்தகுமார், தாசில்தார்கள் எட்வர்ட்வில்சன், சங்கிலிரதி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பானுபிரசாத், மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் ராகேஷ் மகளிர் அணி அமைப்பாளர் ஷாமல மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் மற்ற 28 கிராமங்களில் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மனுக்களை பெற்றனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் எம்.எல்.ஏ தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.