கன்னியாகுமரி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 1 மாதத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தகவல்…

கன்னியாகுமரி:-

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி வளர்ச்சிப்பணிகள் குறித்த
ஆய்வுக்கூட்டம், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசியதாவது :-

மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் இந்த கல்லூரியை தந்தார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் ஆணைப்படி, கல்லூரி வளர்ச்சிக்காக இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தற்போது இக்கல்லூரியில் 100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை 150-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் நரம்பியல் தொடர்பான மேல்பட்டப்படிப்பு இந்த கல்லூரியில் துவங்குவதற்கு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி முதல்வரும், துறை ரீதியாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு வயிறு சம்பந்தமான நோயாளிகள் குணமடைவதற்கும், சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையிலேயே செய்வதற்கும், அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒரு மாதத்திற்குள் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் அருகிலுள்ள கேரளாவிற்கும், சென்னைக்கும் சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள். எனவே, அதற்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்கள் நலன் கருதி இந்த மருத்துவமனையிலேயே விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியின் தரத்தை உயர்த்துவதற்கும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும், கடந்த ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் அறிவித்தார். அதுசம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து இன்னும் ஒருமாதத்திற்குள், சுகாதாரத்துறை அமைச்சர் இந்த கல்லூரிக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளார். அதற்கான மாதிரி ஆய்வுக்கூட்டமாக, என்னென்ன அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், சிறு,சிறு வசதிகள் ஆகியவை குறித்து, முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மூலம் நிதியை பெற்று இந்த கல்லூரியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.பாலாஜி நாதன், உதவி உறைவிட நல மருத்துவர் கலைக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.நாகராஜ், மருத்துவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.