தமிழகம்

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ரூ.1093 கோடி நிலுவைத்தொகை வழங்க அனுமதி – ஒரு வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை…

சென்னை:-

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க கழக அரசு ரூ.1093 கோடி அனுமதித்துள்ளது. இந்த தொகையை ஒரு வாரத்திற்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் ஏராளமான போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருந்தது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் அந்த நிலுவைத்தொகை முழுவதையும் வழங்க ஆணை பிறப்பித்தார்.

இதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவரே நேரில் வழங்கினார். இப்பொழுது ஓய்வூதியம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய அகவிலைப்படி போன்ற நிதி பணிக்கொடைகள் நிலுவையில் உள்ளன. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதிய நிலுவைத் தொகைக்காக ரூ.1093 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நிதி மூலம் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கு குறுகிய கால கடனாக ரூ.1093 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதன் மூலம் 5500 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த தொகை ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேற்கண்ட 5500 போக்குவரத்து தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.