மதுரை

உள்ளாட்சித்தேர்தலில் கழகத்திற்கு வெற்றி தேடித்தந்த முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி – மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்டாலின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் என்ற செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நிலையூர் முருகன், தக்கார் பாண்டி,        கே பொன்னுச்சாமி, வெற்றி செழியன், பகுதி கழக செயலாளர்கள் ஜீவானந்தம், பன்னீர்செல்வம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மேலூர் பெரியசாமி,பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்

வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

மனிதப் புனிதர், பாரதரத்னா, கழக நிறுவனத் தலைவர் டாக்டர் புரட்சித் தலைவரின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 106 கிளைகளிலும், மேலூர் ஒன்றிய ஒன்றியத்தில் உள்ள 233 கிளைகளிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 197 கிளைகளிலும், மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 195 கிளைகளிலும், மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள 95 கிளைகளிலும் ஆகமொத்தம் 826 கிளை கழங்களிலும், மாநகராட்சி பகுதியில் உள்ள 28 வார்டு பகுதிகளிலும் புரட்சித்தலைவர் பிறந்த தினமான ஜனவரி 17-ந்தேதி, கழக கொடியினை ஏற்றி, புரட்சித் தலைவர் திரு உருவ படத்தை அலங்கரித்து, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடுவது என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், அம்மா அரசுக்கு எதிராக, ஸ்டாலின் கடுமையான பொய்ப் பிரச்சாரத்தையும், அவதூறு பிரச்சாரத்தையும் பரப்பினார் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் எதிர்கொண்டு, பொய் பிரச்சாரத்தை தூள் தூளாக்கி எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும், என்ற புரட்சித்தலைவி அம்மாவின் இலட்சிய முழக்கங்களை நனவாக்கும் வண்ணம், ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை தந்து, கழகத்திற்கு பெருமை தேடித்தந்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.