தற்போதைய செய்திகள்

நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று மாணவ, மாணவிகள் மனதில் நினைத்தால் வெற்றி நிச்சயம் – கல்லூரி விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை அனைவரிடத்திலும் விளக்கினர். மூன்று நாட்கள் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் நிறைவு விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் பேசியதாவது.

அறிவியல் என்பது உலகளாவிய விஷயமாகி விட்டது. அறிவியல் பல்வேறு ஆக்கப்பூர்வ சக்திகளை ஏற்படுத்தி உள்ளது. அறிவியலின் வளர்ச்சியால் பல அயல் நாடுகள் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. மாணவ, மாணவிகள் படிக்கும் போதே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து செயல்பட்டால் எதிலும் வெற்றி பெறுவார்கள்.

நாளைய விஞ்ஞானி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.. சிந்திக்கும் நோக்கம் என்ன என்று புரிந்து செயல்பட வேண்டும். மாணவ பருவம் ஒரு அற்புதமான பருவம். கேட்பதை , பார்ப்பதை மனதில் பதிய வைக்கும் பருவம். எதையும் சாதிக்க முடியும் என்பது தான் மாணவ பருவம். உலகத்தோடு போட்டி போட அறிவியல் மிகவும் முக்கியம். மாண பருவத்தில் கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் ஞானம் உண்டாகும். கேட்பதை விட, படிப்பதை விட செய்கின்ற செயல்பாடு என்பது மிகப் பெரியது.

நீங்கள் இப்போது குனிந்து படித்தால் பிறகு நிமிர்ந்து வெற்றி நடை போடலாம். இதில் வெற்றி பெற்ற 20 மாணவ, மாணவிகளை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமங்களின் மூலமாக கேரளாவில் நடை பெறும் இஸ்ரோவின் ராக்கெட் லாஞ்சை பார்ப்பதற்கு மாணவர்கள் கல்லூரி செலவில் அழைத்து சென்று கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

பின்னர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.உடன் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், கல்லூரி தலைவர் ஜோதி அம்மாள்.கல்லூரி செயலர் செவாலியார் பரமேஸ்வரன், இயக்குனர் விஜயசுந்தரம், சி.இ.ஓ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.