தற்போதைய செய்திகள்

தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி – விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை…

மதுரை:-

தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி என்று விளையாட்டு வீரர்களுக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கினார்.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட உடற்பயிற்சி அலுவலர் லெனின், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர் ஜெயவேல், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அபுதாஹீர், வட்டக் கழக செயலாளர்கள் தங்கபாண்டியன், மகேஸ்வரன் மற்றும் பாலமுருகன், மகாதேவன், வேங்கைமாறன், செந்தில், புதூர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் ஆர்வமுடன் இருக்க வேண்டும்.விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது தான் உடல் வலிமைமட்டுமல்லாது மன வலிமையும் உங்களுக்கு வரும். இந்த ரேஸ்கோர்ஸ் மைதானத்தை புரட்சித்தலைவர் உருவாக்கினார். அதன்பின் புரட்சித்தலைவி அம்மா சென்னையில் ஒரு உலகப் புகழ்பெற்ற நேரு விளையாட்டு அரங்கத்தை உருவாக்கினார். விளையாட்டு துறைக்கு இன்று தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அது மட்டுமல்லாது சென்னையில் ரூ.28 கோடியில் உலக சதுரங்கப் போட்டியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்தினார்.மேலும் பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார். அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரும் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி வழங்கி வருகிறார். விளையாட்டு போட்டியில் பங்குபெற்று உலக அளவில் அல்லது மாநில அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக முதலமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 2 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி கொடுத்துள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சலுகை கிடையாது.இங்கு நடைபெறும் விளையாட்டு போட்டியில் 40 பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும். விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்தால் நீங்கள் மனம் தளரக் கூடாது ஏனென்றால் தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி ஆகும்.

இந்த ரேஸ்கோர்ஸ் மைதானம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் திருப்பாதம் பட்ட இடமாகும். அந்த புனிதமான இடத்தில் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற நீங்கள் படிப்படியாக வெற்றிபெற்று இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.