சிறப்பு செய்திகள்

அர்ஜூனா விருதுபெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து….

சென்னை:-

அர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பாஸ்கரனுக்கு இந்திய அரசின் “அர்‌ஜூனா விருது” அறிவிக்கப்பட்டதை பாராட்டி  அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தின் விவரம் வருமாறு:-

“2018-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 10-வது உலக ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும், இந்தியாவில் நடைபெற்ற 52-வது ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளீர்கள். தங்களின் சாதனைகளை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம், இந்திய அரசு தங்களுக்கு “அர்ஜூனா விருது” அறிவித்து கவுரவித்துள்ளது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆணழகன் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்களுக்கு, என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் இதுபோன்று பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் பல்வேறு விருதுகளைப் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.