தற்போதைய செய்திகள்

மக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது – அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்…

நாமக்கல்:-

மக்களின் தேவைகளை அறிந்து கழக அரசு பூர்த்தி செய்கிறது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வெப்படையில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை திறந்து வைத்து, கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், வேளாண்மைத்துறையின் சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சம் மானியத்தில் 5 விவசாயிகளுக்கு மழைத்தூவான்களையும், மினிகிட் விநியோகம் திட்டத்தின் கீழ் ரூ.1,800 மானியத்தில் 5 விவசாயிகளுக்கு பாசிப்பயிறு விதை பொட்டலங்களையும், விதை கிராமத்திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு ரூ.4,125 மானியத்தில் நெல் விதை மூட்டைகளையும், செம்மை கரும்பு சாகுபடி திட்டத்தின் கீழ் ரூ.36,000 மானியத்தில் 4 விவசாயிகளுக்கு கரும்பு நாற்றுகளையும், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.500 மானியத்தில் 5 விவசாயிகளுக்கு மரக்கன்றுகளையும்,

நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் திட்டத்தின் வறட்சி மிகுந்த மானாவாரி நிலத்தில் பனை விதை விநியோகம் செய்யும் திட்டத்தின் கீழ் ரூ.4,700 மானியத்தில் 15 விவசாயிகளுக்கு பனை விதைகளையும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திர கருவி வழங்குதல் திட்டத்தின் கீழ் ரூ.19.49 லட்சம் மானியத்தில் 5 விவசாயிகளுக்கு உழுவை இயந்திரங்களையும் என மொத்தம் ரூ.21.77 இலட்சம் மானியத்தில் 44 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

இப்பகுதி விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் உழவு செய்வதற்கு இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு டிராக்டர்கள் வழங்கப்படும். கோடை காலத்தில்கூட மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு பொதுமக்களின் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்துவருகிறது.

தற்போது, மேட்டூர் அணையின் கிழக்கு கரை கால்வாயில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொள்ள உரம், விதை, இடுபொருட்கள் தேவையான அளவு வேளாண்மைத் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் நூற்பாலைகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்துள்ளதால் காவல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதேபோல குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வெப்படை பகுதியில் அதிகம், நூற்பாலைகள் உள்ளதால் இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்தப் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வருடத்தில் அப்பணிகள் முடிவடைந்து இரண்டு தொகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும். இப்பகுதியில் இனி தண்ணீர் பிரச்சினை இருக்காது.

நாமக்கல்லில் வரும் சனிக்கிழமை புதிதாக சட்டக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் சட்டக் கல்லூரி அமைக்க உள்ளது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து எதிர்காலத்தில் தேவைப்படக்கூடிய நலத்திட்டங்களையும் அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக விளங்கி வருகிறது.

மேலும் பள்ளிபாளையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் 40 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற 100 அலுவலகங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிபாளையத்தில் உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி விழாவில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.செந்தில், பள்ளிபாளையம் நகர கழக செயலாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான பி.எஸ்.வெள்ளியங்கிரி, டி.சி.எம்.எஸ் தலைவர் திருமூர்த்தி உட்பட கழகத்தினர் கலந்து கொண்டனர்.