தற்போதைய செய்திகள்

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ரூ.6.40 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

மதுரை

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ரூ.6.40 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மயான பாதையில் பாலம் கட்டும் பணி, வி.அம்மாபட்டி ஊராட்சி முதல் கே.சத்திரபட்டி சாலை வரை 1.075 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், வேளாம்பூர் ஊராட்சி வே.குச்சம்பட்டி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்த அமைச்சர் முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட டி.கல்லுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி மாணவிகளின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

மேலும் கள்ளிக்குடி ஒன்றியம் ஓடைப்பட்டி ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்ததை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட கே.வெள்ளாகுளம் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை குத்து விளக்கு ஏற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா.பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் சௌந்தர்யா, முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லதுரை, கள்ளிக்குடி வட்டாட்சியர் ராமசந்திரன், திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ப.இந்திராணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஐயப்பன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சண்முகப்பிரியா பாவடியான், மீனாட்சி மகாலிங்கம், லதா ஜெகன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர்கள் மு.முனியம்மாள், கலைச்செல்வி கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போ.சு.கலைச்செல்வன், இளங்கோவன், செல்லதுரை, ஊராட்சித்தலைவர்கள் டி.மணிகண்டன், பெ.செல்லாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.