சிறப்பு செய்திகள்

தாமிரபரணி ஆற்றுப் பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு….

சென்னை

பாபநாசம் சேர்வலாறு-மணிமுத்தாறு அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றுப்பாசனத்திற்கு 26-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள திருநெல்வேலி கால்வாய் மற்றும் பாளையங் கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால், வடக்கு பிரதானக் கால்வாய் மற்றும் தெற்கு பிரதானக் கால்வாய்களின் மூலம் பாசன வசதி பெறும் பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் சிறப்பு நிகழ்வாக 26.8.2019 முதல் 14.9.2019 முடிய பாபநாசம் சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து 1500 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி வட்டங்களில் உள்ள கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் மற்றும் 62,107 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.