தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி ஒன்றியத்தில் சீராக குடிநீர் விநியோகம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உத்தரவு…

தூத்துக்குடி:-

தூத்துக்குடியை சுகாதார மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கோவில்பட்டி ஒன்றிய பகுதியில் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் குறித்தும், குடிநீர் பற்றாக்குறை உள்ள ஊராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வழங்குவது, குடிநீர் பகிர்மான குழாய்களை சீரமைப்பது மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள், குளம், குட்டைகள் தூர்வாருதல் தொடர்பாக பல்வேறு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். குளம் தூர்வாரும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வரும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் விரைவில் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது;-

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் எந்த ஊராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதோ அந்த பகுதிகளில் சீராக குடிநீர் வழங்கிட தேவையான நடவடிக்கை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மழைக்காலங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாக சிறு குளங்களை தூர்வார வேண்டும். குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கழிவு நீர் செல்கின்ற கால்வாய்களை பழுது ஏற்பட்டிருந்தால் சீரமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் 1000க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை மேற்கொண்டு தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சுகாதார மாவட்டமாக மாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

முன்னதாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் திட்டம் 1-ல் 92 வீடுகள் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 95 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வர்ணம் பூச்சு, டைல்ஸ்; ஒட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், திட்டம் 2-ல் 120 வீடுகள் ரூ.10.25 கோடி மதிப்பீட்டிலும்; 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு வீடுகள் பூச்சு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு விரைவில் கட்டுமான பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.