சிறப்பு செய்திகள்

தமிழின் சிறப்பை உலகமெல்லாம் அறிய செய்ய அறிஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – துணை முதலமைச்சர் அன்பு அழைப்பு

சென்னை:-

தமிழின் சிறப்பை உலகமெல்லாம் அறிய செய்ய அறிஞர் பெருமக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில்  நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் தமிழர் தலைமுறையின் நம்பிக்கையை மெய்யாக்கி, தை மகள் வந்து நம்மை சீராட்டி மகிழும் இனிய நன்னாளில், தெய்வத் திருக்குறள் வாயிலாக தமிழர்களின் பாரம்பரியத்தை, உலகிற்கு எடுத்துச் சொன்ன ஈடில்லாப் பெரும்புலவர் திருவள்ளுவர் திருநாள் விழாவிற்கு, தலைமை ஏற்கும் நல்வாய்ப்பை எனக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு”

என்றார் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை. தமிழர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள். உலகின் முதன் மொழியாகவும், வேறு எந்த மொழிக்கும் மூத்த மொழியாகவும் திகழ்கின்ற தமிழ் என்ற ஒப்பில்லாத மொழியைப் பேசும் பாக்கியம் பெற்றவர்கள் தமிழர்கள்.

தமிழராகிய நமக்குத் தனிப் பண்பாடு இருக்கிறது. இப்பூவுலகமே பின்பற்றுகின்ற புகழ் வாய்ந்த வாழ்வியல் நெறிகளை – வாழ்க்கை வழிமுறைகளை, தமக்கு சொந்தமாகக் கொண்ட இனம், தமிழ் இனம்.உலகுக்கே முன்மாதிரியாக வாழ்ந்த பண்பாடு நம் பண்பாடு. பூப் பூத்துக் கிளைகள் தலையாட்டும் புன்னை மரங்களை கூட தன் அன்னை வயிற்றில் பிறந்த தங்கையாக நினைத்து உறவு பாராட்டும் தேசம் நம் தமிழ்தேசம்! அதுதான் இயற்கையின் மீது தமிழர்கள் காட்டிய பாசம், நேசம்.

காடாகவும் மேடாகவும் இருந்த பகுதிகளை எல்லாம் பண்படுத்தி, பக்குவப்படுத்தி, கரை புரண்டு ஓடி வந்த ஆற்று வெள்ளத்தை கட்டுக்குள் அடக்கி, நெடு வயல் நிறைந்திடவே நீர் பாய்ச்சி, உழவுத் தொழில் செய்தவர்கள் நம் முத்தமிழ் மூதாதையர்கள். ஓர் இனம் நன்கு வாழ வேண்டும் என்றால், அந்த இனம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருக்க வேண்டும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருக்க வேண்டுமென்றால், உழவுத் தொழிலை மிகுந்த சிறப்பாக முன்னெடுத்துச் செய்தல் வேண்டும்.

நமக்கு அறியக் கிடைக்கும் இரண்டாயிரம் ஆண்டுக் காலத்து தமிழ் இலக்கியங்களில் உழவு குறித்த செய்திகள் மிகுதியாகப் பதிவாகியுள்ளன. “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்னும் குறள் வரிகளில் வள்ளுவப் பெருந்தகை உழவின் மேன்மையை உரக்கச் சொல்லுகிறார். உழவின் பெருமை மட்டுமல்ல, உலகின் அனைத்தும் பொருள் குறித்தும் முப்பாலில் தப்பாமல் சொன்னவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர், உலக அறம் அனைத்தையும் அழகுடன் எடுத்து சொல்லும் திறம் கொண்ட நூல், திருக்குறள்.தமிழ்மொழி, தமிழர்களின் அடையாளம் என்றால் தமிழின் அடையாளமாகத் திகழ்வது திருக்குறளே ஆகும்.

“இல்லாதது என்று ஒன்றில்லை, எங்கள்
வள்ளுவன் வாய் மொழியினுள்”

என்று போற்றிப் புகழ்ந்திடும் வகையில், எல்லா அறங்களையும் சொல்லி, உலகப் பொதுமறையென போற்றிடும் வண்ணம் திருக்குறளை படைத்தார் திருவள்ளுவர்.மனித சமுதாயத்தின் நல்வாழ்விற்காகவும், மனிதர்களின் வாழ்வினை நெறிப்படுத்துவதற்காகவும் உலகப் பொது முறையாம் திருக்குறளை வழங்கினார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

உலகளாவிய உயர்பெரும் தத்துவத்தை ஈரடிக்குள் அடக்கியவர். தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர். தமிழர்களை உலக அரங்கில் நெஞ்சு நிமிர்த்தி நிற்கச் செய்தவர். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பொருந்தக் கூடிய கருத்துகளை அன்றைக்கே எடுத்துரைத்தவர்.

சிந்தனைச் சிற்பி,
வாழ்வியல் அறிஞர்,
அறம் கூறும் ஆசான்,
பொதுவுடைமைப் புதுமையாளர்,
வாழ்க்கை நெறி உரைக்கும் வல்லுநர்,
தமிழுக்கு கிடைத்த தனிக் கொடை,
திருவள்ளுவர் பெருந்தகையின் புகழைப் போற்றி,

அவரது பெயரால் திருவள்ளுவர் தினம் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசின் சார்பில் இன்று விழா எடுத்து, அவ்விழாவில் தமிழறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் சிறப்பு சேர்த்து, புகழ் பரப்பவும், தமிழ் இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்று பெருமைப்படுத்தவும், தமிழுக்கு தொண்டு செய்து தமிழ் மொழியை அழியாது காத்து மென்மேலும் வளர்ச்சி காணவும் எண்ணற்ற திட்டங்களை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் செயல்படுத்தினர்.

தமிழ்ப் புலவர்கள் மத்தியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த “திருவள்ளுவர் ஆண்டு” நடைமுறையை, அனைத்து அரசு ஆவணங்களிலும் அதிகாரப் பூர்வமாக பயன்படுத்திட வேண்டும் என்று 1981-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அறிவித்து, அரசாணை பிறப்பித்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்..

வள்ளுவப் பெருந்தகைக்கு சிறப்பு சேர்த்து, அவர் காட்டிய நெறிமுறையில் இலக்கியச் சிறப்பைக் கொண்ட தமிழ்ச் சான்றோரை, கௌரவப்படுத்திட முதன்முதலாக திருவள்ளுவர் விருதை ஏற்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் மொழி காக்கவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர். வழி நின்று, தஞ்சைத் தரணியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தி, மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் கண்டு, இன்னும் இதுபோல ஓராயிரம் திட்டங்களைத் தமிழ் வளர்ச்சிக்காகத் தந்து, கண் இமைகள், விழியைக் காப்பது போல் தன் செயல் திட்டங்களால் தமிழ் வளர்ச்சி காணச் செய்த தங்கத் தாரகை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

பிற மொழி பேசுபவர்களும் திருக்குறளின் சிறப்புகளை உணரவேண்டும்; வெளிநாடுகளுக்கும் வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு, உலக மற்றும் இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திடச் செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகையை உயர்த்தி அளித்து, சிறந்த நூல்களை வெளியிடுவதற்காக நிதி உதவியை வழங்கி மாணவக் கண்மணிகளுக்கு வழங்கப்படுகின்ற பள்ளி, கல்லூரி மாணவர் இலக்கியப் போட்டிக்கான பரிசுத்தொகையை உயர்த்தி வழங்கி, தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாடச் செய்து, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை, அலை கடலுக்கு அப்பாலுள்ள அமெரிக்காவில் சிகாகோ மாநகரில் சிறப்புடன் நடத்தி, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழ்ப்பணிக்கே தன்னை அர்ப்பணித்து சிறப்புடன், செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசு ரூ.1 கோடி அளித்துள்ளது.அந்தத் தமிழ் உணர்வு ஒரு துளி அளவும் குறைந்திடாமல், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தன்னலமின்றி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் தொண்டு செய்யும் பெரியோர்களுக்கும், இன்று இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

விருது பெறும் பெரியோர் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சிறந்த தமிழ் தொண்டு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசின் ஈடு இணையில்லா தமிழ்வளர்ச்சி சாதனைத் திட்டங்கள் மீண்டும் மீண்டும் தொடரும். அது, வள்ளல் பாரி உவந்தளித்த தேரிலே, தொட்டுத் தொடர்ந்த முல்லையின் கொடியைப்போல், மக்கள் உள்ளங்களில் பற்றிப் படரும்.

நாங்கள் ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு, அலைகடல் ஓரம் துயில் கொண்டிருக்கும் எங்கள் அன்புத் தலைவி புரட்சித்தலைவி அம்மாவின் ஆன்மா வானத்திலிருந்து வாழ்த்தும்! புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசு கலங்கரை விளக்கமாகக் களப்பணி ஆற்றும்!

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.