தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்,காஞ்சிபுரம் மாவட்ட கருவூலங்களுக்கு புதிய கட்டடம் – துணை முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

திண்டுக்கல் – காஞ்சிபுரம் மாவட்ட கருவூலங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  நிதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

33 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திண்டுக்கல் மாவட்டக் கருவூல கட்டடம் பழுதடைந்துள்ளதாலும், ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திடும் வகையிலும் சுமார் 11,227 சதுர அடி பரப்பளவில் 2.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்டக் கருவூலத்திற்கு புதிய கட்டடம் கட்டுதல் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திடும் வகையில் சுமார் 21,658 சதுர அடி பரப்பளவில் 4.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தணிக்கைத் தகவல் மேலாண்மை முறைமை எனும் இணையதளம் வழியாக இயங்கும் கணினி மென்பொருள் மூலம், தணிக்கை தொடர்பான தகவல்களை, தணிக்கையாளர்கள் நாள்தோறும் பதிவேற்றம் செய்யலாம். இதற்கு இணையதள வசதி அவசியமாகும். எனவே, கூட்டுறவுத் தணிக்கைத் துறை தணிக்கையாளர்களுக்கு 5.00 இலட்சம் ரூபாய் செலவில் தகவல் அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும் கூட்டுறவு தணிக்கை துறை பணியாளர்களுக்கு, தணிக்கை, தணிக்கைத் தொடர்பான சட்டங்கள், தணிக்கை நடைமுறைச் சிக்கல்கள், சிறப்புத் தணிக்கை, தணிக்கைத் தகவல் மேலாண்மை முறைமை மற்றும் அலுவலக நடைமுறை ஆகியவை குறித்த துறை சார்ந்த சிறப்புப் பயிற்சி அளித்திட பயிற்சிக்கான பயிற்றுநர்கள், பயிற்சிப் புத்தகங்கள், பயிற்சிக் காலத்தில் ஏற்படும் உணவுச் செலவுகள் போன்ற பயிற்சிக் கட்டமைப்பு வசதிகள் 10.00 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத் துறையின் பணி மற்றும் கடமைகள் திருத்தியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் தணிக்கை, தனிச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்படாத நிறுவனங்களின் தணிக்கை, அரசுத்துறைகளின் உள் தணிக்கை மற்றும் அரசின் நிதியுதவி பெறும் அரசுத்துறைகளின் பல்வேறு நிறுவனங்கள், வாரியங்கள் திட்டங்களின் தணிக்கையும் இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில் கொண்டும், துறையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இதய தெய்வம் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத் துறையின் பெயர் “மாநில அரசுத் தணிக்கைத் துறை” என மாற்றம் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.