தற்போதைய செய்திகள்

ஆவடி விரைவில் பசுமை மாநகரமாக மாறும் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேட்டி

திருவள்ளூர்

ஆவடி விரைவில் பசுமை மாநகரமாக மாறும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை தமிழ் வளர்ச்சி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் பின்னர் பருத்திப்பட்டு ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ஏரி திட்டில் 56 வகையான மூலிகை மரங்களை அமைச்சர் க.பாண்டியராஜன் நட்டார். இறுதியில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஏரித்தீவில் அடர்வன நடவு முறையால் இன்னும் ஓராண்டில் இங்கு அடர்ந்த வனம் உருவாகும். இந்த பசுமை பூங்காவில் உள்ள ஏரியில் உள்ள இரண்டு பறவைகள் சரணாலயத்தில் முழு நெல்லி, தான்றிக்காய், கருங்காலி, மருதமரம், மலவேம்பு, அரளி மஞ்சள், மகிமை, வில்வம், வேம்பு, சொர்க்கம், அரு நெல்லி, நாவல், நாகலிங்கம், இலுப்பை, பலா, உதயன், வாகை, மாதுளை, மா, கொடி மரம், கொய்யா, விளாங்காய், உள்ளிட்ட 56 வகையான மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பசுமை ஏரி, தண்ணீர், மரங்கள் நிறைந்த தீவு ஆகியவை பறவைகளை கவரும். அதன் மூலம் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும். இங்கே வரும் பறவைகளை காண மக்கள் கூட்டம் அதிக அளவில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தற்போது கூட சைபிரியன் பெலிகன் பறவைவை இந்த பருத்திப்பட்டு ஏரியில் காண முடிகிறது. இது தவிர மற்ற அனைத்து வகையான வெளிநாட்டு பறவைகளுக்கு பிடித்த இடமாக இந்த பசுமை பூங்கா திகழ்கிறது. இதன் காரணமாக பசுமை மாநகரமாக ஆவடி மாநகராட்சி விரைவில் மாறும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

பேட்டியின்போது நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உள்பட பலர் உடனிருந்தனர்.