சிறப்பு செய்திகள்

சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – முதலமைச்சர் வழங்கினார்

மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு கார் பரிசை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்படும் என்று கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருந்தார். அதன்படி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சாதனை புரிந்த கே.ரஞ்சித்குமாருக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் பரிசாக அளிக்கப்பட்ட காருக்கான சாவியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வழங்கினார்.

இதேபோல் சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காளையின் உரிமையாளர் மாரநாடுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் பரிசாக வழங்கப்பட்ட காருக்கான சாவியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.