சிறப்பு செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் துணை முதல்வர் ஆய்வு….

நீலகிரி:-

நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மழையினால் ஏற்பட்ட வெள்ளசேதம்- மழை குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத்குமார் எம்.பி. ஆகியோரும் உடன் இருந்தார்.

நீண்ட நேர ஆய்வுக்கு பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு முன்பும், மழைக்கு பின்பும் ஏற்பட்ட நிலைமை குறித்தும், மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுத்தது குறித்தும் விவரமாக அதிகாரிகளுடன் கேட்டறிந்தேன். வெள்ள சேதம் பற்றியும், மழை பற்றியும் ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்ததால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. அனைத்து விபரங்கள் குறித்தும் நாளை விபர அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.