தற்போதைய செய்திகள்

கஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்றம் – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…

சென்னை:-

கஜா புயலுக்கு சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதி அளித்தார்.

சட்டப்பேரவையில் உறுப்பினர் ப.ஆடலரசன் கேள்விக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்து பேசியதாவது:-

உறுப்பினர் ப.ஆடலரசன்: கஜா புயல் ஏற்பட்டபோது, மின்சார கம்பிகள் L.T., H.T. Line-களெல்லாம் விளைநிலங்களின் மூலமாக சென்றுகொண்டிருந்தது. கஜா புயல் ஏற்பட்டபோது, மரங்கள் எல்லாம் முறிந்துவிட்டது.

அதனை அப்புறப்படுத்தும் அந்தப் பணிகளையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு, புதியப் பணிகளுக்கு மின்சார வாரியம் சென்றுவிட்டது. சாலையோரங்களில் மின்கம்பங்களை நட்டு, மின்சாரத்தை கொடுப்பதற்கான பணிகளை செய்யும் பணிகளுக்கு சென்றுவிட்டக் காரணத்தினால், விளைநிலங்களில் L.T., H.T. Line-களின் wireகள், மின்கம்பங்கள் எல்லாம் முறிந்து கிடக்கின்றன.

இப்போது விவசாயிகள், மராமத்துப் பணிகள் தொடங்கி, உழவுப் பணிகள் மற்றும் விவசாயப் பணிகள் தொடங்க இருக்கிற காரணத்தினால், விவசாயிகள் உழவுப் பணிகளை தொடங்க வேண்டும். ஆகையால், அந்த மரங்களை அப்புறப்படுத்த அரசு முன்வர வேண்டுமென்று அரசினுடைய கவனத்தை ஈர்த்து அமைகிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் அவர்கள் கோரிய திருத்துறைப்பூண்டி பகுதியில், கிட்டத்தட்ட 32,000 மின்கம்பங்கள் விழுந்திருந்தன. 1,800 மின்கம்பங்கள் வயல்வெளியில் கிடக்கின்றன. அதையும் உடனடியாக ஒரு மாத காலத்திற்குள் எடுப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்கிறோம். அதேபோல மாண்புமிகு உறுப்பினர் பூண்டி கி.கலைவாணன் அவர்களும் கேட்டிருக்கிறார்கள். அவருடைய தொகுதியிலும் 250 மின்கம்பங்கள்தான் எடுக்க வேண்டியிருக்கின்றன. அதையும் கூடிய விரைவில் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம்.

ஏனென்று சொன்னால், கிட்டத்தட்ட 3,31,772 மின்கம்பங்கள் இந்த 5 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டன. முதலில் மின்சாரம் கொடுக்க வேண்டும். 66 லட்சம் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், மின்சாரம் கொடுக்க வேண்டுமென்பதற்காக புது வழியில், ஏற்கெனவே வயல்வெளியில் இருந்தது, இப்போது சாலை வழியாக புது மின்கம்பங்கள் போடப்பட்டிருக்கின்றன. பழைய மின்கம்பங்களையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் பணிகள் அதிகமாக இருந்த காரணத்தினால் முடியவில்லை. வெள்ளாமை வருகின்ற காரணத்தினால், கூடிய விரைவில் அந்த மின்கம்பங்களை எடுத்து, உறுப்பினர் சொன்ன கோரிக்கையை புரட்சித்தலைவி அம்மாவினுடைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பதிலளித்தார்.