தற்போதைய செய்திகள்

சிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது – துணை முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பில் சிறந்த தாலுகாக்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தபோது கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

மாவட்ட வாரியாகவும், வட்டார வாரியாகவும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் செயற்திட்டங்கள் சென்றடைந்த தொலைவினைக் கண்டறியவும் தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட வாரியான பிரிவுகள் உருவாக்கப்படும். நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை மாநில அளவில் முழுமையாக அடைந்திட துறை ரீதியான கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் இன்றியமையாதவை.

எனவே முன்னேற்றத்தினை கண்டறியவும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஒவ்வொரு துறையிலும், சிறப்பு பிரிவு ஒன்றை உருவாக்குவது இன்றியமையாததாகும். ஆகவே துறை வாரியான நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தைக் கண்டறியவும், தொடர்ந்து கண்காணிக்கவும் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்படும். மாவட்டம் மற்றும் வட்டாரங்களின் வளர்ச்சிக்கான காரணிகளை நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளின் இணைதள கண்காணிப்பு பலகையின் செயல்பாட்டுடன் இணைப்பதன் வாயிலாக அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மாதந்தோறும் தரவரிசைப்படுத்தவும் கண்காணிக்கவும் இயலும்.

மாநிலத்தின் பின்தங்கிய வட்டாரங்கள் ஏனைய வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், மாதந்தோறும் தரவரிசைப்படுத்தும் அதனடிப்படையில் சிறப்பாக செயல்படுவனவற்றைக் கண்டறிந்து ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.