தற்போதைய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தூத்துக்குடியில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைச்சர் நின்று கொண்டு சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரோஜா பூவை பெற்றுக் கொண்ட வாகன ஓட்டிகள் இனி சாலைவிதிகளை முறையாக கடைபிடிப்பதாக அமைச்சரிடம் உறுதி அளித்தனர்.