தற்போதைய செய்திகள்

காவேரி நதிநீர் பிரச்சினை விவகாரம்,தவறை நியாயப்படுத்தி பேசுவதா? ஸ்டாலினுக்கு முதல்வர் காட்டான பதில்…

சென்னை:-

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தவறி விட்டு அந்த தவறை நியாயப்படுத்தி பேசுவதா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காட்டமாக பதிலளித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், காவேரி நதிநீர் பிரச்சினை குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-

காவேரி பிரச்சனை, இது ஒரு மிக உணர்வுபூர்வமான பிரச்சினை. காவேரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரை, சுமார் 15 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தர தீர்வு எட்டப்பட்டு இருக்கலாம். அதைத்தான் அவர் சொல்கிறார். மிகப் பெரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது, அந்தக் காலக்கட்டத்தில் தவற விட்டதன் காரணமாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் மூலமாக பல்வேறு தீர்ப்புகளை பெற்று நாம் அமல்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது என்ற அடிப்படையிலே தான் அவர் பேசினாரே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

அந்த வாய்ப்பு உங்களுக்கு கிட்டியது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி காவேரி நதிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு இருந்தால், இந்த பிரச்சினைக்கு இடம் இருந்திருக்காது. 2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்து 2 மாதம் ஆயிற்று. அந்த 2 மாத இடைவேளையில், நீங்கள் அனைத்தும் செய்து இருந்தால் கர்நாடகாவோ, கேரளாவோ, பாண்டிச்சேரியோ நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. அதை தவறவிட்டவர்கள் நீங்கள் தான் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் சத்தமாக பேசினால் ஒன்றும் நடக்காது. நடந்தது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும். காவேரி நதிநீர் பிரச்சனை பற்றி நம்மைவிட வெளியில் இருப்பவர்களுக்கு அதிகமாக தெரியும். ஏழை எளிய பாசன விவசாயிகளுக்கு முழுமையாக தெரியும். 2007-ல் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. 2 மாத காலம் இருந்தது. நீங்கள் ஆட்சி அதிகாரத்திலே, மத்தியிலே இருந்தீர்கள், மாநிலத்திலும் இருந்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால் அந்த 2 மாத காலத்திலே நமக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம்.

தேவையான அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து இருந்தால், நமக்கு இந்த பிரச்சினையே வந்திருக்காது. அந்த நேரத்திலே, தவறவிட்டு விட்டீர்கள். உச்சநீதிமன்றத்தில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தார்கள் என்று சொன்னீர்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பலமுறை அப்பொழுது இருந்த பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்தார்.

அப்பொழுது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்கள். அம்மா அவர்கள் வருகின்றபோது, இந்த நடுவர்மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டுமென்று எவ்வளவோ முறை கடிதம் எழுதினார்கள், நேரடியாக போய் கொடுத்தார்கள். எதுவும் நடக்காத காரணத்தினால், உச்சநீதிமன்றம் போய் தான் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை பெற்றதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, அம்மா தான்.

இதை எல்லாம் கோட்டைவிட்டுவிட்டு, பிறகு நடுவர்மன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலே மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தான் நாம் இறுதி தீர்ப்பினை பெற்று இருக்கிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டப் போராட்டத்தை நடத்தி பெற்ற வெற்றி, வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன் சொல்கிறேன் என்றால், இது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சனை. கிடைக்கின்ற வாய்ப்பை தவறவிட்டுவிட்டீர்கள் என்று தான் சொல்கிறோம். வேறு ஒன்றும் கிடையாது.

அதிகாரம் ஒருமுறை தான் கிடைக்கும். அதை பயன்படுத்துவது தான் உண்மையாக மக்களுக்கு தொண்டு செய்கின்ற நிலை. அதை நீங்கள் தவறவிட்டுவீட்டீர்கள். இரண்டு மாதங்கள் இருந்தது. அமைச்சரவை இலாகா பெறுவதற்கு எத்தனை முறை நீங்கள் டெல்லி போய்விட்டு வந்தீர்கள். ஏன் இதை நிறைவேற்ற முடியாது. இதுவே வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். அவர் காவேரி பிரச்சினைக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

ஆகவே, அதற்கு நீங்கள் ஏதாவது குரல் கொடுத்தீர்களா? இந்த இரண்டு மாத இடைவெளி இருக்கும் போது தானே, நம்முடைய உரிமையை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் தானே அவர்கள் நீதிமன்றத்திற்கு போனார்கள். நீதிமன்றத்திற்கு போன காரணத்தினாலே பல ஆண்டு காலம் தீர்ப்பு கிடைக்கப் பெறாமல் இருந்தது. ஆகவே, எதிர்க்கட்சி துணைத் தலைவர் தன்னுடைய வாத திறமையால் எந்த உண்மையையும் மறைக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் சமாளிக்கிறார். தவறவிட்டு வீட்டீர்கள். தவறவிட்டுவிட்ட பிறகு அதை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. நமக்கு கிடைக்கின்ற வாய்ப்பை, அதை பயன்படுத்தி இருந்தால் தமிழக விவசாய பெருமக்கள் நன்மை பெற்று இருப்பார்கள். டெல்டா பாசன விவசாய மக்களுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும். 2007-லிருந்து 2019 வரை போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்பதை தான் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.