சிறப்பு செய்திகள்

மறைந்த பி.எச்.பாண்டியனுக்கு சொந்த ஊரில் மணிமண்டபம் – படத்திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உறுதி

திருநெல்வேலி

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற திருவுருவப்படம் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

கழகத்தின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான பி.எச்.பாண்டியன் இல்லத்தில் நேற்று அவரது படம் திறப்பு நிகழ்ச்சியும், இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கோவிந்தபேரியில் உள்ள பி.எச்.பாண்டியன் இல்லத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று பி.எச்.பாண்டியன் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 

அருமை அண்ணன் பி.எச்.பாண்டியன் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். வானளாவிய தீர்ப்பு வழங்கும் அண்ணன் பி.எச்.பாண்டியன் என்பதை மக்கள் அறிவார்கள். நான்கு முறை எம்.எல்.ஏ, இரண்டு முறை எம்.பி போன்ற பணிகளை ஆற்றியவர். அவரது பேச்சில் திடமான முடிவு இருக்கும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்டு 33 ஆண்டுகள் எஃக்கு கோட்டையாக உள்ள இயக்கம். முதல்வராக 18 ஆண்டுகள் பணி செய்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கீழ்தட்டு மக்கள் மேலே வர பட்ஜட்டில் 50 சதவீதம் சமுக பாதுகாப்பு திட்டங்களை தந்ததன் மூலம் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

அம்மாவின் அரசு 30 ஆண்டுகளாக ஆட்சி செய்கின்ற உரிமையைப் பெற்றது என்றால் அது கழகம் தான். அம்மாவின் மறைவிற்கு பிறகு சோதனை வந்த நேரத்தில் தனிப்பட்ட குடும்பத்திடம் ஆட்சி சென்று விடக்கூடாது என்று முதல் குரல் கொடுத்தவரும் பி.எச்.பாண்டியன் தான். இந்த இயக்கம் நீடித்து இருக்க அடித்தளம் இட்டவர். அவர் நம்மை விட்டு சென்றாலும் அவர் ஆற்றிய பணிகள், தியாகங்கள் நம்மிடம் இருக்கும். தைரியம், கொள்கை, தியாகம், கொள்கைக்காக, சமரசம் எதுவும் ஏற்று கொள்ளாதவர் பி.எச்.பாண்டியன். உலகம் இருக்கின்ற வரை அவருடைய புகழ் நிலைத்து இருக்கும். அவருக்கு இப்பகுதியில் மணி‘மண்டபம் அமைக்க ஏற்பாடு செய்வேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.