தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு – துணை முதலமைச்சர் உறுதி…

சென்னை:-

தமிழகத்தில் நியாயமாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில் நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

பொதுமக்களின் கோரிக்கைகள் / குறைகளுக்கு சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 2018-ம் ஆண்டில் பெறப்பட்ட 2,08,216 மனுக்களில், 2,05,949 மனுக்களும், இணையதளம் வழியாக பெறப்பட்ட 49,791 மனுக்களில், 49,169 மனுக்களும் இதுவரை தீர்வு செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் ஆகியவற்றை பொது (தேர்தல்கள்) துறை நடத்துகிறது.

2019-ம் ஆண்டிற்கான மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் சில மாதங்களுக்கு முன்பு சிறந்த முறையில் அமைதியாக எந்தவித அசம்பாவிதமில்லாமல் நடத்தி முடிக்கப்பட்டது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தல்களின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியானது அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டது.

மேலும், மனசாட்சிப்படியும் ‘சட்ட நெறிமுறைக்குட்பட்டு வாக்களிப்பது’ ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிடும் கால அட்டவணையின்படி, எதிர்வரும் 01.01.2020 அன்றுள்ளபடி 18 வயது அடைந்தோரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், முழு தேர்தல் இயந்திரமும் தனது பொறுப்பினை முற்றிலும் உணர்ந்து கொண்டு, பிழைகள் அற்ற வாக்காளர் பட்டியலைக் கொண்டு செயல்படவும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மாவின் அரசு இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பினையும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கி வருகிறது என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மற்றும் அமைச்சரவை குறித்த மானியக் கோரிக்கைகள் குறித்து அவையில் விவாதம் நடத்தப்படுவதில்லை என்பது மரபு. எனவே, எனது பதிலுரையை இந்த இரண்டு மானிய கோரிக்கைகளின் மீது இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.