தற்போதைய செய்திகள்

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை:-

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  நிதித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து முனையம் (முன்னர் சென்னை புறநகர் பேருந்து நிலையம்) மற்றும் மாதவரம் புறநகர் பேருந்த முனையம் ஆகியவற்றில் கண்காணிப்பை மேம்படுத்த பேருந்து நிலையங்களில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டும், ஏற்கனவே உள்ள கேமராக்களின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் ரூ. 2.25 கோடி செலவில் முகம் அடையாளம் காட்டும் கேமராக்கள் பொருத்தப்படும்.

2006 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கட்டட அனுமதி வரைபடங்கள் மற்றும் 2000-ஆம் ஆண்டு முதலான மனைப்பிரிவு வரைபடங்கள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய எல்லா வரை படங்களும் மின்னணுமயமாக்கப்படும்.
கள ஆய்வின் போது அதிகாரிகள் அளவீடுகளைத் துல்லியமாக மேற்கொள்ள வசதியாக நவீன லேசர் முறை சார்ந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.

திட்ட அனுமதி வழங்கும் போது அமைவிடத்தை துல்லியமாக அறியவும், விதியிலிருந்து விலகிய பகுதிகளைக் கண்டறியவும், வரைபடங்களில் புவிசார் நிலைப்படுத்துதல் முறை, ஆயத் தொலைவுகளையும் குறிப்பிடும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னை நகரில் மண் தன்மை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து சேகரிக்கப்பட்டு நிகழ்நிலையில் பதிவேற்றப்படும்.கோயம்பேட்டிலுள்ள மலர் அங்காடிக்கு கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள 3 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் நவீன மலர் அங்காடி விரிவுபடுத்தப்படும்.

கோயம்பேடு அங்காடிகளில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் வசதிக்காக கழிப்பிட வசதியுடன் கூடிய தங்கும் விடுதி ரூ. 2 கோடி செலவில் கட்டப்படும்.வேளச்சேரி துரித இரயில் நிலையத்தில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நிறுவப்படும்.

திருமழிசை குத்தம்பாக்கம் கிராமத்தில் 20 ஏக்கர் பரளப்பளவில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் புதுநகரில் சமுதாயக்கூடம் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் அபிவிருத்தி செய்யப்படும்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தினுள் முதல்வர் இல்லமாக அமைந்திருக்கும் புராதனக் கட்டடத்தினை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலுள்ள 59 காலி பணியிடங்கள் (உதவி திட்ட அமைப்பாளர் – 17, திட்ட உதவியாளர் நிலை – I – 15, திட்ட உதவியாளர் நிலை II – 27) உடனடியாக நிரப்பப்படும்.

திட்ட அனுமதி விண்ணப்பங்கள் மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் போன்றவை காகித பயன்பாடில்லாமல் நிகழ்நிலை மூலம் வழங்க ஏதுவாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஒற்றசை் சாளர இணையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிப் பகுதியில் 1200 சதுர அடிக்கு குறைவான கட்டடத்திற்கு அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க தவறும் பட்சத்தில் தானாகவே திட்ட அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.